பிள்ளையார்பட்டி அருள்மிகு ஶ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி  நிறைவாக தீர்த்த வாரி வைபவம் இன்று நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உலகப் பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டியில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அதிகாலையிலிருந்து குவிந்தனர். குடைவரைக் கோயிலான இக்கோயில், சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது. கற்பக விநாயகா் கோயில் தமிழ்நாட்டின் மிகப்பழமையான குகைக் கோயில்களுள் ஒன்றாகும். இங்கு விநாயகப்பெருமான் பிற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார்.






இங்கு மூலவா் கற்பகவிநாயகா் 6 அடி உயரத்தில் வலம்புரி நிலையில் காணப்படுகிறார். இந்த கோயிலில் காணப்படும் 15-க்கும் மேற்பட்ட கல்வெட்டுக் குறிப்புகள் இக்கோயிலின் தொன்மையை பறை சாற்றுகிறது. செப்டம்பா் மாதத்தில் நடைபெறும் விநாயகா் சதுா்த்தி விழாவே இங்கு நடைபெறும் பிரதான திருவிழா ஆகும். இந்நிலையில் இந்த ஆண்டு சதுர்த்தி விழா இக்கோயில் கோலாகலகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 10 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.  பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி அன்று தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குவிந்தனர். சதுர்த்தி அன்று கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பஞ்சாங்க முறைப்படி சதூர்த்தி விழாவனது நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரை இருப்பதால் தீர்த்தவாரி நிகழ்ச்சி விநாயகர் சதுர்த்தி  இன்று நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.







இந்நிலையில், ஶ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு இன்று (19.09.2023) - தீர்த்த வாரி வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழா கடந்த பத்தாம் தேதி அன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் பத்தாம் திருநாளில் தீர்த்த வாரி வைபவம் கோவில் திருக்குளத்தில் நடைபெற்றது. இதை காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிள்ளையார்பட்டி ஆலயத்தில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகை புரிந்தனர். முன்னதாக  கோயில் திருநாள் மண்டபத்தில் உற்சவர் கற்பக விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார். அருகே சண்டிகேஸ்வரர் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் மங்கள வாத்தியங்களுடன் கோயில் உள்பிரகாரம் வளம் வந்து திருக்குளத்தில் எழுந்தருள செய்தனர். இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் அங்குச தேவரையும் அஸ்திர தேவரையும் படிக்கறையில் எழுந்தருள செய்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை வைத்து சிறப்பு பூஜைகளை நடத்தினர். பின்னர் அஸ்திர தேவருக்கும் அங்குச தேவருக்கும் மஞ்சள் பால் தயிர் பஞ்சாமிர்தம் சந்தனம் விபூதி பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமண திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.





நிறைவாக திருக்குளத்தில் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க  அங்குச தேவருக்கும் அஸ்திர தேவருக்கும் மூன்று முறை தீர்த்தவாரி நடைபெற்றது தொடர்ந்து மகா கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது பின்னர்  விநாயகப் பெருமானுக்கு தங்க கவசம் அணிவித்து வண்ண மலர்மாலைகள் கொண்டு அலங்காரம் நடைபெற்றது. இதன் பின்னர் 18 படி பச்சரிசி, வெல்லம், ஏலக்காய்,  நெய் கொண்ட ராட்சத்தைக் கொழுக்கட்டை விநாயகப் பெருமானுக்கு  படைக்கப்பட்டது.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Vinayagar Chaturthi 2023: பிள்ளையார்பட்டி திருத்தேரோட்ட விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு