எல்லாவற்றிற்கும் முழு முதற்கடவுளாக போற்றி வணங்கப்படுபவர் விநாயகர். கணபதி, ஆனைமுகன், விக்னேஷ்வரன் என பல பெயர்களால் போற்றி வணங்கப்படும் இந்த பிள்ளையாரப்பன் அவதரித்தது எப்படி என நாரதபுராணத்தில் விளக்கியுள்ளனர்.


பார்வதி தேவிக்கு காவல்:


பார்வதி தேவி நீராடச் சென்றிருந்த நேரத்தில் தன்னுடைய பாதுகாப்பிற்காக யாரும் இல்லாமல் இருந்துள்ளனர். அப்போது, பார்வதி தேவி அங்கிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவத்தை உருவாக்கினார். அந்த உருவத்திற்கு தன்னுடைய அனுக்கிரகத்தால் அதற்கு உயிர் கொடுத்தார். பார்வதி தேவியே உயிர் கொடுத்த அந்த உயிர் அவரது பிள்ளை ஆகிவிட்டது என்பதாக தெரிவிக்கப்படுகிறது




பின்னர், தான் நீராடச் செல்வதால், வரும் வரை யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டு சென்றார். தன்னை உருவாக்கிய தாயின் வார்த்தையை காப்பாற்றும் விதமாக அவரும் காவலுக்கு நின்றார். அப்போது, அங்கு சிவபெருமான் வந்தார். அவர் பார்வதி தேவியை காண உள்ளே சென்றபோது அவரை காவலுக்கு நின்ற பிள்ளை தடுத்துள்ளது. தான் பார்வதிதேவியின் மணாளன் என்று சிவபெருமான் கூறியபோதும், அந்த பிள்ளை உள்ளே விட மறுத்ததால் சிவபெருமானுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.


தலையை வெட்டிய ஈசன்:


இதையடுத்து, அவர் ஆத்திரத்தில் அந்த பிள்ளையின் தலையை வெட்டி வீசினார். நீராடிவிட்டு வந்த பார்வதி தேவி தான் உருவாக்கிய பிள்ளை தலையில்லாமல் இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். தன் பிள்ளையை சிவபெருமானே சிதைத்ததால் ஆத்திரமடைந்த அவர் காளியாக உருவெடுத்தார். தன் கண்ணில் படுவதை எல்லாம் வெட்டி வீசினார்.


தேவி ஆவேசம் அடைந்து காளி அவதாரம் எடுத்ததை கண்டு சிவனிடம் அனைவரும் முறையிட்டனர். தேவியின் கோபத்தை தணிப்பதற்காக தேவர்களிடம் வட திசையில் சென்று உங்கள் கண்ணில்படும் முதல் ஜீவராசியின் தலையை வெட்டி கொண்டு வாருங்கள் என்று கூறினார். ஈசனின் ஆணையை ஏற்றுக்கொண்ட தேவர்கள் வடதிசையை நோக்கி சென்றனர். அங்கே ஒரு யானை சுற்றித்திரிந்து கொண்டிருந்தது.


பிள்ளையார்:




அவர்கள் அந்த யானையின் தலையை வெட்டி கொண்டு வந்தனர். உடனடியாக பார்வதி தேவி உருவாக்கிய அந்த பிள்ளையின் உடலில் யானையின் தலையை வைத்து அதற்கு சிவபெருமான் உயிர்கொடுத்தார். அப்படித்தான் ஆனைமுகத்துடன் விநாயகப்பெருமான் அவதரித்தார். தான் உருவாக்கிய பிள்ளை மீண்டும் உயிர்பெற்றதை கண்டு பார்வதிதேவியும் சமாதானம் அடைந்தார்.


அப்படி உருவான விநாயகப் பெருமானை கணேசன் என பெயரிட்டு தேவர்களுக்கு தலைவராக சிவபெருமான் நியமித்ததாக நாரதபுராணம் கூறுகிறது. அதேசமயம் இந்த நிகழ்வு அரங்கேறிய பிறகு யானைமுகத்துடன் இருந்த அந்த பிள்ளை யார்? என்று பார்வதி தேவி கேட்டதால்தான் பிள்ளையார் என்ற பெயர் கூறியதாகவும் ஒரு கதை உண்டு. விநாயகப் பெருமான் அவதரித்த இந்த நாளே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. அதேசமயம், கஜமுகாசுரனை விநாயகப் பெருமான் ஆவணி மாதத்தில் அழித்த நாளே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுவதாகவும் கதைகள் கூறப்படுகிறது.


மேலும் படிக்க: Krishna Jayanthi 2023: ஸ்ரீ கிருஷ்ணர் ஜென்ம தினப்பூஜைக்கு ரெடியா? வீட்டிலே கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செய்வது எப்படி?


மேலும் படிக்க: Vinayagar Chaturthi 2023: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு சிலை வாங்கப்போறீங்களா? ப்ளீஸ் இதை கொஞ்சம் படிச்சுட்டு போங்க..