மகா விஷ்ணுவின் 10 அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் கிருஷ்ண அவதாரம். ஆயர்குலத்தில் கண்ணனாக வளர்ந்த கிருஷ்ணர் செய்த லீலைகளும், அவர் நடத்திய திருவிளையாடல்களும் ஏராளம் என நம்பப்படுகிறது. அப்பேற்பட்ட கிருஷ்ணர் ஆவணி மாதத்தில் பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது.


கிருஷ்ண ஜெயந்தி என்றும் கோகுலாஷ்டமி வரும் செப்டம்பர் மாதம் 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி தமிழ்நாட்டிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வீட்டிலே கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடுவது எப்படி என்பதை கீழே விரிவாக காணலாம்.


வழிபாடு எப்படி?


கிருஷ்ண ஜெயந்தியன்று காலையிலே எழுந்து குளித்துவிட வேண்டும். கிருஷ்ணரை நாமத்தை நெற்றியில் அணிந்து கொள்வதும் சிறப்பு ஆகும். கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தைய நாள் வீட்டை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்பது நம்பிக்கை.


அதேபோல, முந்தையே நாளே பூஜைக்கு பயன்படுத்தும் பாத்திரங்களையும் நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டிற்கு கிருஷ்ணர் சிலையை பயன்படுத்தினால் அதையும் நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்வது நம்பிக்கை.




கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டிற்காக நாம் தயாராக வைத்துள்ள கிருஷ்ணர் சிலை அல்லது கிருஷ்ணர் படத்தை பூஜையறையில் ஒரு பலகை வைத்து அதில் வைக்க வேண்டும். களிமண்ணால் செய்த கிருஷ்ணர் சிலையாக இருந்தாலும் சிறப்பு என்பது நம்பிக்கை.


படையல்:


நாம் தயாராக வைத்துள்ள கிருஷ்ணர் சிலை அல்லது படத்திற்கு முன்பு ஒரு வாழையிலையை போட வேண்டும். அந்த வாழை இலையில் அரிசியை பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு வெண்கல குடத்தை முழுமையான நீர் நிரப்பிய நிலையில் வைக்க வேண்டும். அந்த வெண்கல குடத்தின் கழுத்துப்பகுதியில் மாவிலை மற்றும் பூக்களால் அலங்கரித்து வைக்க வேண்டும்.


எந்தவொரு பூஜையாக இருந்தாலும், செயலாக இருந்தாலும் விநாயகரை வணங்கி தொடங்குவதே இந்துக்களின் ஐதீகம் ஆகும். அதனால், இந்த பூஜையை தொடங்கும் முன் முழுமுதற்கடவுள் விநாயகரை வணங்கும் விதமாக மஞ்சளில் பிள்ளையார் பிடித்து இலையில் வைக்க வேண்டும்.


இப்போது, நாம் கலசம் போல தயாராக வைத்துள்ள குடத்திற்கும், பிள்ளையாருக்கும் குங்குமம், சந்தனம் ஆகியவற்றை வைக்க வேண்டும். இப்போது, கிருஷ்ண ஜெயந்திக்காக நாம் தயாராக வைத்துள்ள சீடை, முறுக்கு, பலகாரங்கள், இனிப்புகள் ஆகியவற்றை வாழையிலையில் வைக்க வேண்டும் என்பது நம்பிக்கை.


மனம் உருகி வணங்குதல்:


கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய் வாழையிலையில் வைப்பது மிகவும் சிறப்பு ஆகும். இப்போது, குடும்பத்தினருடன் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வணங்கி படையலிட்ட பொருட்களை தீபம் காட்டி பூஜை செய்ய வேண்டும். மனமுருகி கிருஷ்ணரை வணங்கினால் உங்கள் துன்பம் நீங்கி வாழ்வில் எல்லா நன்மையும் கிடைக்கும் என்பது ஐதீகம்.




இந்த பூஜைகளுக்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் விதமாக, கிருஷ்ண ஜெயந்தியன்று வீடுகளில் குழந்தைகளின் பாதம் சுவடு படிந்திருந்தால் கிருஷ்ணரே நம் வீட்டிற்கு விஜயம் செய்ததாக நம்பி அதை செய்கிறார்கள் பக்தர்கள். அதனால், குழந்தைகள் பாதச்சுவடு வீட்டின் உள்ளே வருவது போல படிந்திருந்தால் அது சிறப்பு என்பது தலையாய நம்பிக்கை


மேலும் படிக்க: Marriage: இன்னும் கல்யாணம் ஆகலையா..? செல்ல வேண்டிய கோயிலும்..செய்ய வேண்டிய பரிகாரமும் இதுதான்..!


மேலும் படிக்க:  Vinayagar Chaturthi 2023: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் என்ன தேதி? என்ன கிழமை.? முழு விவரம் உள்ளே..!