மகாவிஷ்ணுவின் 9வது அவதாரமான கிருஷ்ணர் அவதரித்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, இந்துக்களின் மிகப்பெரிய பண்டிகையாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி.
விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி:
கிருஷ்ண ஜெயந்தி வரும் 6-ந் தேதியும், விநாயகர் சதுர்த்தி வரும் 17-ந் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. பூஜை, வழிபாடுகளுடன் இந்த இரண்டு பண்டிகைகளும் சிறப்பாக கொண்டாடப்படும். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டும், விநாயகர் சதுர்த்தியையும் முன்னிட்டு கிருஷ்ணர் மற்றும் விநாயகர் சிலைகள் வாங்கி வீட்டில் வைத்து வழிபடுவது வழக்கம் ஆகும்.
இரண்டு பண்டிகைகளுக்கும் இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் சிலைகள் தயாரிக்கும் பணிகளை சிலை தயாரிப்பு தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ண ஜெயந்திக்காக சிறிய வடிவிலான சிலைகள் அதிகளவில் தமிழ்நாட்டில் விற்பனையாவது வழக்கம். இதையடுத்து, சிலைகள் விற்பனை கடைகளில் கிருஷ்ணர் மற்றும் கண்ணன் சிலைகள் வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிலைகள் தயாரிப்பு:
விநாயர் சதுர்த்தி விழா தமிழ்நாடு உள்பட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சிறிய அளவு முதல் மிகப் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்படும். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட பெருநகரங்கள் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் முக்கிய வீதிகளில் மிகப்பெரிய விநாயகர் சிலைகள் மக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்படுவது வழக்கம்.
இதனால், பல வண்ணங்களில் பல வடிவங்களில் பல அளவுகளில் விநாயகர் சிலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய பகுதிகளில் சிலை தயாரிப்பு தொழிலாளர்கள் அதிகளவில் விநாயகர் மற்றும் கிருஷ்ணர் சிலைகளை தயாரித்து வருகின்றனர். குறிப்பாக, விநாயகர் சதுர்த்திக்காக பல பகுதிகளில் இருந்தும் சிலைகளுக்கான ஆர்டர் பெறப்பட்டுள்ளதால் சிலைகளை வடிவமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சூடுபிடிக்கும் விற்பனை:
இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் மற்றும் கிருஷ்ணர் சிலை விற்பனை படுஜோராக நடைபெற்றும் வருகிறது. கோகுலாஷ்டமிக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் வீடுகளில் கண்ணனின் வரவை உறுதி செய்ய வேண்டும் என பக்தர்கள் கிருஷ்ணர் சிலையை ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணர் ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை காரணமாக விநாயகர் மற்றும் கிருஷ்ணர் சிலைகள் உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்திருப்பது தொழிலாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு வெண்ணமலை ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
மேலும் படிக்க: உசிலம்பட்டி அருகே சக்தி வாய்ந்த, சங்கிலிகருப்பு - சீலக்காரியம்மன் கோயிலில் புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை