விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டமானது 150 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள பூவரசன்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. கல் தூணில் நரசிம்மர் தோன்றி காட்சியளித்த இடத்தில் கிபி.7ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னரால் கட்டப்பட்ட சிறப்புடைய, தென் அஹோபிலம் என்று அழைக்கப்படும் பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.


அதன்படி, பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 150 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.  இதனையொட்டி லட்சுமி நரசிம்மருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் 32 அடி உயரம் உள்ள அலங்கரிக்கப்பட்ட தேரில் லட்சுமி நரசிம்மர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


இதனைத்தொடர்ந்து கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கங்களுடன் லட்சுமி நரசிம்மர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பூவரசன்குப்பம் கிராமத்தில் உள்ள பல்வேறு வீதிகளின் வழியாக லட்சுமி நரசிம்மர் கோயில் தேர் வீதியுலா வந்து கொண்டிருக்கிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வரும் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். தேர் திருவிழாவையொட்டி பூவரசன்குப்பத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண