Sivayoginathar Temple: பெண் சாபத்தை போக்கும் திருவிசநல்லூர் சிவயோக நாதசுவாமி கோயில்

Thiruvisanallur Sivayoginathar Temple: பெண் சாபங்களை நீக்கும் கோயில் பற்றி தெரியுங்களா?

Continues below advertisement

தஞ்சாவூர்: பெண் சாபங்களை நீக்கும் கோயில் பற்றி தெரியுங்களா? அறிந்தோ, அறியாமலோ செய்த தவறால் பெண் சாபத்திற்கு ஆளாகியிருந்தால், திருவிசநல்லூர் கோயிலில் வந்து வழிபட சாபம் பாவம் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

Continues below advertisement

கேரள மன்னன் கணபதி என்பவனின் பெண் பாவத்தை போக்கிய திருத்தலம் திருவிசநல்லூர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெண்களை வஞ்சித்து, ஏமாற்றி வாழ்ந்த கணபதியின் பெண் பாவம் இங்கு வழிபட அகன்றதாம். இத்தல ஈசனின் பெயர் சிவயோக நாத சுவாமி என்பதாகும். சுயம்பு மூர்த்தியான இவர், கிழக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தல விருட்சங்களாக அரசு, வில்வம் உள்ளன. சம்பந்தரின் பாடல் பெற்ற தலம் இது.

திருவிசநல்லூர் பகுதியில் சிறந்த சிவ பக்தர் மகான் ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர். தினமும் காலையில் இக்கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வார்.  ஒருநாள் கூட தவறியதில்லை. ஒருமுறை கார்த்திகை அமாவாசை தினம் அன்று இவர் தமது முன்னோர்களுக்கு திதி கொடுக்க மிகுந்த ஆச்சாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. திதி கொடுக்கும் காலையில் வறியவர் ஒருவர், வெங்கடேச தீட்சிதரின் வீட்டுக்கு வந்து மிகவும் பசியாக இருக்கிறது. சாப்பிட ஏதாவது தாருங்கள் என்று வேண்டினார்.

இதனால் மனம் இரங்கிய ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் திதிக்காக செய்யப்பட்ட உணவை வழங்க, இதை கண்ட அந்தணர்கள், இதற்கு பரிகாரமாக ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் காசி சென்று கங்கையில் நீராட வேண்டும். இல்லாவிட்டால் ஊரை விட்டு விலக்கி வைப்போம் என்று கூறி திதி செய்யவும் மறுத்து விட்டனர். ‘வடநாட்டில் உள்ள கங்கையில் ஒரே நாளில் நீராடித் திரும்ப முடியுமா  என்று மகான் வருந்தி இறைவனை நினைத்து மனமுருகி ‘கங்காஷ்டகம்' என்னும் துதி பாடினார். அவர் பாடி முடித்ததும், அவர் வீட்டுக் கிணற்றில் இருந்து கங்கை பொங்கி வழிந்தது.

கிணற்றிலிருந்து நீர் மேலெழுந்து வழிந்து பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்து வெள்ளக்காடானது. இதைக் கண்டு அதிசயித்த மக்கள், ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரிடம் மன்னிப்புக் கேட்டனர். கங்கை நீரில் நீராடினர். அந்தணர்களும் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டனர். கங்கையிடம் தணியுமாறு பிரார்த்தித்தார் மகான். கங்கையும் அடங்கி அக்கிணற்றிலேயே நிலைத்தது என்பது ஐதீகம். அன்று மாலை திருவிசநல்லூர் கோயிலுக்கு மகான் சென்றபோது ருவறையில் மூர்த்தங்களிடம், ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அதில், ‘இன்று மதியம் ஸ்ரீதர வெங்கேடச தீட்சதர் வீட்டில் திதியில் உண்டதால், இரவு நைவேத்தியம் வேண்டாம் என்று எழுதியிருந்தது.

ஏழையாக வந்து திதி உணவை உண்டது சிவபெருமானே என்றுணர்ந்த அனைவரும், ஸ்ரீதர வெங்கடேச தீட்சதரை போற்றிப் புகழ்ந்தனர். இந்த அற்புத நிகழ்வே ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று திருவிசநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச மடத்தில் நிகழ்கிறது.

மகான் தன்னுடைய கங்காஷ்டகத்தில், ‘கங்கையே நீ இங்கேயே ஸ்திரமாக இரு’ என்று வேண்டுகிறார். அதனால் இந்தக் கிணற்றிலுள்ள தீர்த்தம் எல்லா நாளிலும் கங்கை தீர்த்தமே!. இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் இந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். மகான் வசித்த இல்லம் மடமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு கங்கை பொங்கும் விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசை அன்று தான் கங்கை கிணற்றில் பொங்குகிறது. அன்றைய இரவு முழுவதும் திவ்ய நாம சங்கீர்த்தனம் நடக்கும். கார்த்திகை அமாவாசையன்று அதிகாலை காவிரி நதிக்குச் சென்று, சங்கல்ப ஸ்நானம் செய்து விட்டு, அங்கிருந்து தீர்த்தம் கொணர்ந்து கிணற்றில் விடுவார்கள்.

பிறகு கிணற்றுக்கு கங்கா பூஜை நடத்திவிட்டு காலை ஐந்து மணியிலிருந்து நீராடுவார்கள். அப்போது அங்கு நடக்கும் கங்கா பூஜையின்போது அந்த கிணற்றில் கங்கை பொங்கி வருவதன் அடையாளமாக நுரை மிகுந்துகொண்டு நீர் மட்டம் உயர்ந்து வருமாம். ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும் சிறிதும் நீர் மட்டம் குறையாது. இந்த ஞானம் வழியும் கிணறான திருவிசநல்லூர் தலத்திற்குச் சென்று கார்த்திகை அமாவாசையன்று நீராடுவது பெறுவதற்கு அரிய பெரும் பாக்கியமாகும்.

இந்த கோயிலில் 4 பைரவர்கள் ஒரே சன்னிதியில், யுகத்திற்கு ஒரு பைரவராக அருள்கின்றனர். எனவே இவர்களை சதுர்கால பைரவர்கள் என்று அழைக்கிறார்கள். ஞான கால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் என்பது இவர்களின் திருநாமங்கள். தஞ்சை மாவட்டம் கும்பகோணம்- மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிடைமருதூர். அங்கிருந்து வடமேற்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவிசநல்லூர் உள்ளது.

Continues below advertisement