விழுப்புரம்: மரக்காணத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்ற கூனிமேடு கடற்கரை தீர்த்தவாரி விழாவில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானபொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மாசி மாதம் மகம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் தினமே மாசி மகம். மகத்துவம் வாய்ந்த இந்த மாசி மாதத்தில் தான் அனைத்து கோயில்களில் உள்ள தெய்வங்களுக்கும் நீர்நிலைகளில் தீர்த்தவாரி நடக்கும். அப்போது சாமிகளுடன் சேர்ந்து புனித நீராடினால், அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாசிமக தீர்த்தவாரி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடுகுப்பம் கடற்கரைக்கு எல்லையம்மன், கெங்கையம்மன் மற்றும் கீழ்புத்துப்பட்டு, ஓமிப்பேர், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் இருந்து உற்சவமூர்த்திகளை மாலைகளால் அலங்கரித்து டிராக்டர், மினிலாரி போன்ற வாகனங்களில் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் அனைத்து சாமிகளுக்கும் கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது.
தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கடற்கரையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது திரளான பக்தர்களும் கடலில் இறங்கி புனித நீராடினர். தொடர்ந்து உற்சவ மூர்த்திகளை மீண்டும் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்றனர். முன்னதாக ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் மரக்காணம் கடலோர காவல் படையினர் மற்றும் மரக்காணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர், விழாவிற்கான ஏற்பாடுகளை கூனிமேடுக்குப்பம் மீனவர் பஞ்சாயத்தார் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.
செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவில் வளாகத்தில் மாசி மக திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சிங்கவரம் ரங்கநாத பெருமாள், செஞ்சி கோதண்டராமர் செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர், செஞ்சி ஏகாம்பரேஸ்வரர், பெரியகரம் மாரியம்மன் இல்லோடு ஏலவார்க்குழலி, நெகனூர் புதூர் சீனிவாச பெருமாள் உள்ளிட்ட சாமிகள் ஊர்வலமாக செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரைக்கு கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் உற்சவ மூர்த்திகள், கோதண்டராமர் கோவில் வளாகத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சாமிகள் அந்தந்த கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில்களின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.