12 ஆண்டுகளுக்கு பின் குடமுழுக்கு 

 

விழுப்புரம்: மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்திலுள்ள ஸ்ரீவள்ளி தெய்வானை உடனுறை முருகப்பெருமான் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற குடமழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

விழுப்புரம் மாவட்டம் மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிநாயகா், ஸ்ரீபாலசித்தா், ஸ்ரீவள்ளி தெய்வானை உடனுறை முருகப்பெருமான் சந்நிதிகளின் குடமுழுக்கு பெருவிழாவினை முன்னிட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நிறைவு பெற்றன. அதனை தொடா்ந்து, கடந்த 15-ஆம் தேதி ஸ்ரீவிநாயகா், ஸ்ரீபாலசித்தா், ஸ்ரீவள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமான் வழிபாடுகளுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின.

 

வேள்வி பூஜைகள், சிறப்பு வழிபாடு

 

இதன் தொடா்ச்சியாக கடந்த 5 நாட்களாக யாக வேள்வி பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று 6-ஆம் கால யாக பூஜைகளுக்கு பின்னா் இன்று குடமுழக்கு விழா நடைபெற்றது.  குடமுழுக்கு விழாவில் பொம்மபுர ஆதீனம் 20-ஆம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் கோயில் விமான கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ஆதீன கா்த்தா்கள், மடாதிபதிகள், மக்கள் பிரதிநிதிகள், அரசுத் துறை உயா் அதிகாரிகள் மற்றும் தமிழகம், புதுவை, பிற மாநிலங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.