பனை விதை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பனை மரங்களை அதிகப்படுத்தவும் குழந்தைகளுக்கு பிடித்தது போல் விநாயகர் உருவம் செய்துவருவது பாராட்டை பெற்றுள்ளது.


Vinayagar Chaturthi 2024 ; ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியிலே விநாயகர் அவதரித்தாக புராணங்கள் சொல்கிறது. இதன் காரணமாகவே ஆவணி மாதம் என்றாலே அது விநாயகருக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்கு விநாயகர் சதுர்த்தி, கணேச சதுர்த்தி என்று பல பெயர்களும் உண்டு.  


விநாயகர் சதுர்த்தி எப்போது?


இந்தாண்டு 2024-இல் விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 7- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் 22- ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது. சதுர்த்தி திதி வரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி மதியம் 1.48 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் மதியம் 3.38 மணி வரை வருகிறது. 6- ஆம் தேதியே சதுர்த்தி திதி பிறந்தாலும் சூரிய உதயத்தின்போது இருக்கும் திதியே அன்றைய தினத்தில் கணக்கில் கொள்ளப்படும் அடுத்த தினமான செப்டம்பர் 7ம் தேதியே சதுர்த்ததி திதி கணக்கில் கொள்ளப்படும். இதனால், வரும் செப்டம்பர் 7ம் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.


விநாயகர் சதுர்த்தி சிலைகள்


இந்நிலையில் வழக்கம் போல இந்தாண்டும் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் தயாராகி வருகிறது. சமீபகாலமாக விநாயகர் சதுர்த்தி சிலைகள் அதிகளவு ரசாயனம் கொண்ட பொருட்கள் மூலம் செய்வதால்,  அதனை ஏரி, குளங்களில் கரைப்பதால்  நீர் நிலைகள் பாதிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், சிலை செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் பனை விதையில் விநயாகர் உருவம் செய்து அதனை பொதுமக்களுக்கு இலவசாமக வழங்க முடிவு செய்துள்ளார்.


சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் பனைவிதை விநாயகர்


”2024- இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தியில் சுற்றுச்சூழல் நலன் காக்க பனைவிதை விநாயகர் தயார் செய்துள்ளேன். விரைவில் நிறைய பனைவிதை விநாயகர்  தயார் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிடவும் திட்டமிட்டுள்ளேன். இந்த பனைவிதை  விநாயகர் பொம்மையினை, விநாயகர் சதுர்த்தி  விழா அன்று வணங்கிய பிறகு நீர்நிலைகளில் விதைப்பதன் மூலம் நீர்நிலைகளில் பனை மரங்கள் வளர்ந்திடக்கூடும். அல்லது ஆற்றின் நீரில் தூக்கி எறிவதன் மூலமாக இந்த பனைவிதை விநாயகர் பொம்மையானது நீரில் அடித்துச் செல்லப்பட்டு கரையோரம் ஒதுங்கி முளைத்து பனை மரங்கள் உருவாகிட அதிகப்படியான வாய்ப்பு உள்ளது. அழிவின் விளிம்பில் இருக்கும் நமது மாநில மரம் பனைமரத்தினை மீட்டெடுக்க இயலும். இந்த பனைவிதை விநாயகர் பொம்மை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாத்திட முடியும்” - என நம்மிடம் சமூக செயற்பாட்டாளர் ஜி.அசோக்குமார் பகிர்ந்துகொண்டார்.


சமூக ஆர்வலருக்கு பாராட்டு


சமூக ஆர்வலர் அசோக்குமார் பனை குறித்த விழிப்புணர்வை நாள்தோறும் செய்து வருகிறார். மரங்கள் நடுவது, சிட்டுக் குருவிகளுக்கு உணவு அளிப்பது, பாரம்பரிய பொருட்களை பாதுகாப்பது என பல விடயங்களை செய்து வருகிறார். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி நிகழ்விற்கு பனை விதை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பனை மரங்களையும் அதிகப்படுத்தவும் குழந்தைகளுக்கு பிடித்த போல் விநாயகர் உருவம் செய்துவருவது பாராட்டை பெற்றுள்ளது.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Vande Bharat: இப்ப வருகிற வந்தே பாரத் தான் மெயின் பிக்சர்: 31-ல் துவங்கி வைக்கிறார் மோடி!


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - "எந்த நாகரிக சமூகமும் இதை ஏத்துக்காது" கொல்கத்தா சம்பவம் குறித்து மனம் நொந்து பேசிய குடியரசு தலைவர்!