வீட்டில் செல்வம் செழிக்க, வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியம் தழைக்க பெண்களால் செய்யப்படும் பூஜைகளில் வரலட்சுமி பூஜை மிகவும் முக்கியமானதாகும். இந்த பூஜை அனைவராலும் செய்யப்படலாம் என்றாலும், பெரும்பாலும் பெண்களே இந்த பூஜையை செய்கின்றனர்.
நடப்பாண்டிற்கான வரலட்சுமி பூஜை ஆடி மாத கடைசி வெள்ளியில் வருகிறது. அதாவது, வரும் 16ம் தேதி( வரும் வெள்ளிக்கிழமை) வருகிறது. பொதுவாக மூன்று நாட்கள் இந்த பூஜை செய்யப்படுவது வழக்கம். ஆனாலும், முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை செய்வது நல்லது ஆகும்,
கலச பூஜை என்றால் என்ன?
வரலட்சுமி பூஜையை பொதுவாக இரண்டு முறைகளில் வழிபடலாம். ஒன்று மகாலட்சுமியின் திருவுருவ படத்தை வைத்து வழிபடலாம். மற்றொன்று கலசம் வைத்து வழிபடுவது ஆகும். முதன்முறை வரலட்சுமி பூஜை செய்பவர்கள் அம்மனின் திருவுருவ படம் வைத்து வழிபடலாம். தொடர்ந்து பூஜை செய்பவர்கள் கலசம் வைத்து வழிபடுவது சிறப்பாகும். கலசம் வைத்து வழிபடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
கலசம் செய்வது எப்படி?
- கலச பூஜை என்பது கோயில்களின் கோபுர உச்சியில் இருக்கும் கும்பம் போன்ற கலசம் வைத்து வழிபடுவதே ஆகும்.
- கலசத்திற்கு எவர்சில்வர் பாத்திரம் அல்லாமல் செம்பு, தாமிரம், வெள்ளி அல்லது மண் என எதில் செய்த கலசத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
- அந்த கலசத்தை சுற்றி மஞ்சள் தேய்த்த நூலால் சுற்றிக் கொள்ள வேண்டும்.
- அந்த கலசத்தின் உள்ளே முக்கால்வாசி அளவிற்கு பச்சரிசியை நிரப்ப வேண்டும்.
- கலசத்தின் உள்ளே நிரப்பப்படும் பச்சரிசியுடன் மஞ்சள், குங்குமம், எலுமிச்சை, காதோலை, கருகமணி, ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு, மாசிக்காய், நாணயங்கள் ஆகியவற்றையும் போட வேண்டும்.
- இப்போது, தேங்காய் ஒன்றை எடுத்து அதன் மீது மஞ்சள், சந்தனம் பூச வேண்டும்.
- அந்த தேங்காயை கலசத்தின் மேலே வைக்க வேண்டும். தேங்காயைச் சுற்றிலும் மாவிலை வைக்க வேண்டும்.
- சிலர் அம்பாளின் முகமாக அலங்கரித்து வைத்திருப்பார்கள். அப்படி வைத்திருந்தால் புடவை, நகைகள் அணிவித்தும், ஜடையிட்டும் அலங்கரிக்கலாம்.
கலசத்தை வைத்து வழிபடுவது எப்படி?
வரலட்சுமி விரதம் இருப்பதற்காக செய்யப்பட்ட கலசத்தை வாசலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். வீட்டில் உள்ள மூத்த சுமங்கலி பெண்கள் அந்த கலசத்திற்கு ஆரத்தி காட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அம்பாளை வீட்டிற்கு அழைக்கிறோம் என்பது ஐதீகம்.
அம்பாளாக கருதி கொண்டு வரப்படும் கலசத்தை பூஜையறையில் உள்ள மனைப்பலகை ஒன்றில் வைக்க வேண்டும். மனைப்பலகை இல்லை என்றால் வாழை இலை ஒன்றை போட்டு அதில் அரிசி அல்லது நெல்லை பரப்பி அதன் மீது கலசத்தை வைக்க வேண்டும். கலசமானது கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி வைப்பது சிறப்பு ஆகும். அம்பாளுக்கு பருப்பு பாயாசம், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், கொழுக்கட்டை, சுண்டல், வடை ஆகியவற்றை படையலாக இட்டு வழிபடலாம்.