வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளார் அவதார தினத்தையொட்டி வடலூரில் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.

 

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று உலகுக்கு எடுத்துரைத்த வள்ளலார் 200 வது அவதார தினத்தை முன்னிட்டு சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது


 

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மருதூர் கிராமத்தில் வள்ளலாரின் அவதார இல்லம் அமைந்துள்ளது. 1823 ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி ராமையா பிள்ளை -சின்னம்மை தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.  சமூகத்தில் உள்ள பல்வேறு முரண்பாடுகளை கலைவதற்கு அரும்பாடு பட்ட ராமலிங்க அடிகளார் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தினார்.

 

கடலூர் மாவட்டம் மருதூரில் வள்ளலாரின் 200 வது அவதார தினத்தை முன்னிட்டு இன்று காலையில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டு ஆன்மீக அன்பர்கள் பெருந்திரளானவர்கள் பங்கேற்றனர். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என

கோஷத்துடன் அணையா தீபத்தின் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சன்மார்க்க கொடியேற்றும் இடத்திற்கு சன்மார்க்க அன்பர்கள் வருகை தந்தனர்.

 

அங்கு ஏற்கனவே இருந்த பழைய கொடியை அகற்றிவிட்டு புத்தம் புதிய மஞ்சள் வெள்ளை நிறத்துடன் கூடிய சன்மார்க்கக் கொடியை ஏற்றி கொடி பாராயணம் பாடி சன்மார்க்க அன்பர்கள் மலர் தூவி சன்மார்க்கக் கொடியேற்றினர். இதனையடுத்து வள்ளலார் அவதார இல்லத்தில் தொட்டிலில் மழலை வடிவாய் வள்ளலாரை திருவுருவத்திற்கு மலர் தூவி தீபம் காட்டி வழிபாடு நடைபெற்றது. 

 

இதில் உலகெங்கிலும் உள்ள ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்று வழிபாடு செய்து வருகின்றனர். தொடர்ந்து இடைவிடாது அன்னதானமும் வழங்கப்பட்டது.