மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த பல்லவராயன் பேட்டையில் புகழ்பெற்றதும், பழமையானதுமான ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீனிவாச பெருமாள் தாயாருடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அங்கு மகாதீபாரதனைக்கு பிறகு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியே நடைபெற்ற தேரோட்டம், இறுதியாக ஆலயத்தின் நிலையை வந்தடைந்தது.
மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் அமைந்துள்ள அஷ்ட தசபுஜ துர்கா மகாலட்சுமி ஆலயத்தில் சதசண்டியாகம் நிறைவு. தருமபுரம் ஆதினகர்த்தர் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பு வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீன சைவ மடத்தில் பழமை வாய்ந்த தருமபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு தனி சன்னதியில் பதினெட்டு கைகளுடன் கூடிய அஷ்டதசபுஜ துர்க்கா மகாலெஷ்மி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, 72 -ம் ஆண்டு சதசண்டி யாகம் கடந்த 26 -ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது.
அதன் ஒரு பகுதியாக 10 -ம் நாளான இன்று சதசண்டி யாக நிறைவு விழா நடைபெற்றது. இதில் யாகத்தில் புனித கடங்கள் வைக்கப்பட்டு நவசண்டி யாகம் உள்ளிட்டவை நடைபெற்று, பூர்ணாகுதி செய்யப்பட்டு மஹாதீபாரானை நடைபெற்றது. தொடர்ந்து தேவி மகாத்மியம், ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்கள் வாசிக்கப்பட்டன, நிறைவாக அம்பாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. 10 -ம் நாளான இன்று பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு அம்பாளுக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதினம் 27 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையில் பள்ளி குழந்தைகள் நெல்மணியில் அகரம் எழுதி ஆரம்பக்கல்வியை தொடங்கினர்.
மயிலாடுதுறை தருமபுரத்தில் உள்ள ஸ்ரீகுருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, மழலையர் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதிதாக பள்ளியில் சேர்ப்பதற்காக குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதிதாக பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு நன்றாக படிக்கும் திறன், சரளமாக பேசும், எழுதும் திறன் வளர வேண்டும் என்பதற்காக நெல்மணியில் குழந்தைகளின் கையால் தமிழ் முதல் எழுத்தான 'அ'கரத்தை ஆசிரியர்கள் எழுத வைத்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு குரு பிரம்மா, குரு விஷ்ணு என்ற மந்திர வார்த்தைகளை கற்றுக்கொடுத்தனர். கல்விக் கடவுளான சரஸ்வதிதேவிக்கு நெல்மணி, அரிசி, பழங்களை வைத்து படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். இவ்விழாவில் குழந்தைகளின் பெற்றோர் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.