சென்னை புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய முக்கிய கோயில்களில் ஒன்றாக, காஞ்சிபுரம் வல்லக்கோட்டை முருகன் கோயில் இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள வல்லக்கோட்டை முருகன் கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமையான கோவில் என நம்பப்படுகிறது. 

பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் மூலவர் 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பிரம்மாண்டமே, 7 அடி உயரம் கொண்ட முருகனின் திருவுருவம் தான். இந்தியாவில் உள்ள உயரமான மூலவர் முருகர் சிலையில் ஒன்றாக இந்த சிலை இருந்து வருகிறது. மூலவர் கோடை ஆண்டவர் என்ற பெயரில் வள்ளி, தெய்வானையுடன் கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார்.

வல்லக்கோட்டை முருகன் கோயில் தல வரலாறு என்ன ? Vallakottai Murugan Temple History 

புராண காலத்தில் இலஞ்சி என்னும் தேசத்தை பகீரதன் என்ற மன்னன் ஆட்சி புரிந்து வந்துள்ளார். பகீரதன் ஒருமுறை தனது ஆணவத்தின் வெளிப்பாடாக, நாரதரை அவமானம் செய்துள்ளார்.

இலஞ்சி மன்னனின் செயலால் கோபமடைந்த நாரதர் அருகில் உள்ள காட்டிற்குச் சென்றார். அங்கு பல நாடுகளை வென்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த கோரன் என்ற அசுரனைச் சந்தித்தார். தன்னை அவமானம் செய்த மன்னரை பழிவாங்க முடிவு செய்த நாரதர், பகீரதன் என்ற அரசனை வென்றால் மட்டுமே உனது திக்விஜயம் முழுமையடையும் என கூறினார்.

கோரன் பகீரத மன்னன் மீது போர் தொடுத்து அவனைத் வென்றான். இதனால் நாட்டையும் செல்வத்தையும் இழந்த மன்னர் காட்டுக்குத் துரத்தப்பட்டார். தனது தவறை உணர்ந்த மன்னர், நாரதர் இடம் மன்னிப்பு கேட்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என ஆலோசனையில் ஈடுபட்டார். நாரதரின் ஆலோசனையில் அடிப்படையில் துர்வாசக முனிவரை சந்தித்தார்.

துர்வாச முனிவரின் உபதேசப்படி, பகீரதன் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டான். அப்படி அவர் வழிபட்ட இடம் தான் வல்லக்கோட்டை என நம்பப்படுகிறது. இதனை தொடர்ந்து முருக பெருமான் அருளால், தான் இழந்த அனைத்து செல்வத்தையும் நாட்டையும் மீண்டும் முருகன் அருளால் பெற்றார் என்பது தல புராணமாக நம்பப்படுகிறது.

இந்திரன் உருவாக்கிய வஜ்ர தீர்த்தம்:

இந்திரனால் உருவாக்கப்பட்ட வஜ்ர தீர்த்தம் இங்குள்ளது. இதில் நீராடி முருகனை வழிபட்டால் வினைகள் நீங்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. வல்லக்கோட்டை முருகன் கோயிலில் இந்திரன் வழிபட்டு இருக்கிறான் என்ற குறிப்புகளும் இருக்கின்றன.

வெள்ளிக்கிழமைகளில் விசேஷம் 

தல புராண கதையின் அடிப்படையில், இழந்த செல்வம் திரும்ப கிடைக்க வேண்டும் என்றால் தொடர்ந்து, 7 வெள்ளிக்கிழமைகள் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் நினைத்ததை நிறைவேறும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

கோயில் கும்பாபிஷேகம் - Vallakottai Murugan Temple Kumbabishekam

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் வரும் ஏழாம் தேதி, கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போது கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை ஏழாம் (July 07) தேதி காலை 10 மணி அளவில் இந்த கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 60 ஏக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 108 சிவாச்சாரியார்களும், 9 ஓதுவார்களும், இணைந்து இன்று மாலை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.