சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் சொர்க்கவாசல் சிறப்பு வைபவம் விமர்சையாக நடைபெற்றது. சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை அழகிரிநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி விழாவையொட்டி நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தில் சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் பங்கேற்றார். முன்னதாக ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகிரிநாதர் ராஜ அலங்காரத்தில் பல்லக்கில் அழைத்துவரப்பட்டார். தொடர்ந்து ஆலய குருக்கள் சுதர்சனம் பட்டாச்சாரியார் தலைமையில் ஏகாதசி ஆராதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நம்மாழ்வார் எதிர் சேவையாற்ற ஆலயத்தின் வடக்கு வாசலான சொர்க்கவாசல் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கங்களுக்கிடையே திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசி தினத்தில் பெருமாளை தரிசித்து சொர்க்கவாசல் வழியே செல்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் அதிகாலை முதலே காத்திருந்தனர்.



அதிகாலை ஐந்து மணி அளவில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ரத்னகிரீடத்தில் ராஜா அலங்காரத்தில் பெருமாளும் தாயாரும் கோவிலின் உட்பிரகாரத்தில் வளம் வந்தார். பின்னர் வடக்கு புரம் அமைந்துள்ள வருடம் ஒருமுறை திறக்கப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பல்லகில் பவனி வந்தார். இதனை தொடர்ந்து பெருமாளும் தாயாரும் திருக்கோவிலை சுற்றி வலம் வந்த பின் பெருமாளுக்கும் தாயருக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வை காண அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 


இதுகுறித்து பட்டாசாரியார் சுதர்சனம் கூறுகையில், விரதத்தில் மிக முக்கிய விரதம் வைகுண்ட ஏகாதசி இந்த நாளில் விரதம் இருந்தால் சொர்கத்திற்கு செல்வார்கள் என்பது ஐதீகம். எனவே இந்த நாளில் பெருமாளை தரிசிப்பது குடும்பத்திற்கு மிகவும் சிறந்தது எனவும் தெரிவித்தார். 



வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருக்கோவில் முழுவதும் காவல்துறையினர் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்காலிக சிசிடிவி கேமராக்கள் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சேலம் மாநகர் முழுவதும் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பபு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதேபோன்று, சேலம் மாநகர பகுதியில் உள்ள பட்டை கோவில், வரதராஜ பெருமாள் கோவில், லட்சுமி பெருமாள் கோவில், உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் நடை திறக்கப்பட்டது. அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்து பின்னர் சொர்க்கவாசல் வழியாக சென்றனர்.