Kanchipuram Ashtabuja Perumal Temple: காஞ்சிபுரம் அஷ்டபூஜ பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
வைகுண்ட ஏகாதசி -Vaikunta Ekadasi
புராணங்களின்படி தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அசுரன் அச்சுறுத்தி வந்தான். முரனால் மிகவும் வேதனைக்கு ஆளான தேவர்கள், திருமாலிடம் சென்று தங்களது துயரத்தைத் தீர்க்குமாறு முறையிட்டனர். அப்போது, முரனிடம் தன்னுடைய திருவிளையாடலை மகாவிஷ்ணு நடத்தினார்.
வைகுண்ட ஏகாதசி ஏன் கொண்டாடப்படுகிறது
அதாவது, போரில் தான் பின்னடைவது போல ஒரு மாயத்தோற்றத்தை மகாவிஷ்ணு உண்டாக்கினார். பின்னர், ஒரு குகைக்குள் சென்று தஞ்சம் அடைந்தார். அந்த குகைக்குள் விஷ்ணு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, மகாவிஷ்ணு குகைக்குள் இருப்பதைக் கண்டறிந்த முரன் அவரைத் தேடிக் கண்டுபிடித்து அழிப்பதற்காக உள்ளே வந்தான்.
நன்றாக தூங்கிக் கொண்டிருந்த விஷ்ணுபெருமான் மீது தனது வாளை முரன் வீசினான். அப்போது, மகாவிஷ்ணு உடலில் இருந்து சக்தி ஒன்று வெளிவந்தது. அந்த சக்தி பெண் வடிவம் எடுத்தது. அந்த சக்தி முரனுடன் போரிட்டு முரனை வதம் செய்தது.
தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றிய அந்த பெண்ணுக்கு மகாவிஷ்ணு ஏகாதசி என்று பெயர் சூட்டினார். முரனை வீழ்த்திய அந்த நாள் ஏகாதசி என்றும், அந்த நாளில் பெருமாளை வணங்குபவர்களுக்கு வைகுண்ட பதவி வழங்கப்படும் என்றும் பெருமாள் வரம் அளித்தார். இந்த நாளே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது.
காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில் - Ashtabuja Perumal Temple Sorgavasal
தமிழகத்தின் பழைமையான திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோவில், தன் சிறப்புமிக்க கட்டிடக்கலை, வரலாற்றுப் பின்னணி மற்றும் பக்தர்களின் அபிமானம் ஆகியவற்றால் புகழ்பெற்றது.
பழங்காலத்தில் இந்திரன் தன் பதவியை இழக்கும் அபாயத்தில் இருந்து மீள, பெருமாளை வழிபட்டு இக்கோவிலில் மோட்சம் அடைந்தான் என்பது புராணக் கதை. மேலும், மகாசந்தன் என்ற யோகி தவம் செய்து பெருமாளை தரிசித்த தலமாகவும் இது கூறப்படுகிறது.
சொர்க்கவாசல் திறப்பு - Sorgavasal
அருள்மிகு ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோவிலை ஐந்தாண்டுகளுக்கு பிறகு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று கோலாகலமாக திறக்கப்பட்டது. வெள்ளி தகடுகளால் ஆன கதவில் திறக்கப்பட்டு அஷ்டபுஜ பெருமாள் பரமபத வாசல் வழியாக வருகை தந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முதல் முறையாக இன்று ஆண்டு சொர்க்கவாசல் திறப்பு ஒட்டி அஷ்டபுஜ பெருமாள் ரத்னாங்கி சேவையில் காட்சி அளிக்கிறார். பல லட்சக்கண பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டதால் நள்ளிரவு முதலே, பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.