தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்


சிவஸ்தலங்கள் வரிசையில் 23வது தலம்


பாடல் பெற்ற காவிரி தென்கரைத் சிவஸ்தலங்கள் வரிசையில் 23-வது தலமாக இருப்பது திருபட்டீச்சரம். இந்நாளில் இத்தலம் பட்டீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தல இறைவனை வழிபடுவர்களுக்கு வினைப் பயன்கள் பற்றாது என்று சம்பந்தர் தனது பதிகத்தின் பல பாடல்களில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். தேவலோகப் பசுவான காமதேனுவின் புதல்வி பட்டி என்ற பசு, இத்தல இறைவனை பூஜித்த காரணத்தால் இத்தலம் பட்டீச்சரம் என்று பெயர் பெற்றது.


மூன்று வாயில்கள் உள்ளன


இவ்வாலயம் கிழக்கு மேற்காக 650 அடி நீளமும், தெற்கு வடக்காக 295 அடி நீளமும் உடையது. 5 பெரிய உயரமான கோபுரங்களும் 3 பிராகாரங்களும் உடையது. பிரதான கோபுரம் 7 நிலைகளையும் மற்ற கோபுரங்கள் 5 நிலைகளையும் உடையன. பட்டீஸ்வரர் கோயிலில் கிழக்கு வாயில், தெற்கு வாயில், வடக்கு வாயில் ஆகிய மூன்று வாயில்கள் பயன்பாட்டில் உள்ளன. பராசக்தி, தனித்து தவம் செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்து இறைவனை பூஜித்து வர, இறைவன் பராசக்தியின் தவத்துக்கு உவந்து தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்த சிறப்புடையது இத்தலம். விஸ்வாமித்திர முனிவர், காயத்திரி சித்திக்கப்பெற்று பிரம்மரிஷி என்ற பட்டம் இத்தலத்தில் பெற்ற சிறப்புடையது.


ராமர் வில்லின் முனையால் தோற்றுவித்த கோடி தீர்த்த கிணறு


வாலியைக் கொன்றதால் ஏற்பட்ட சாயஹத்தி தோஷத்தை, ராமர் இங்கு தன் வில்லின் முனனயால் கோடிதீர்த்தம் என்ற கிணற்றை தோற்றுவித்து, அதன் நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு போக்கிக்கொண்டார். இத்தலத்தில் ராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் ராமலிங்கம் என்று வழங்கப்படுகிறது. மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம், இத்தலத்திலுள்ள ஞானவாவி தீர்த்தத்தின் ஒரு துளி நீர் பட்டதால் சாபம் நீங்கியது.


இத்தகைய சிறப்பு பெற்ற இந்த கோவிலில் சிவன், பார்வதி தேவி சன்னதிகள் தவிர, ஸ்வர்ண விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர், நடராஜர், கஜலட்சுமி, காசி விஸ்வநாதர், சண்முகர் ஆகிய 6 முகங்கள் கொண்ட சண்முகர், சுப்பிரமணியர், துணைவியருடன் சுப்பிரமணியர், சப்தமதாஸ், நவக்கிரகம், மூவர், 63 நாயன்மார்கள் ஆகியோரின் சன்னதிகள், ராமர், பைரவர், திருஞானசம்பந்தர், மாதவரணப் பிள்ளையார், மகாலிங்கம், ஆஞ்சநேயர், சனீஸ்வரர், சூரியன், ரேணுகாதேவி, கீர்த்திவாசர், வேதலிங்கம் மற்றும் தண்டபாணி ஆகிய சாமிகள் உள்ளன. 


மேலும் கருவறையைச் சுற்றியுள்ள இடத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் சாமிகளும் உள்ளன. இந்த கோவிலில் உள்ள துர்க்கை அம்மனை வழிபட ஆடி மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பட்டீஸ்வரம் கோவிலுக்கு வருவது வழக்கம். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா 10 நாள் உற்சவமாக விமர்சையாக நடைபெறும்.


கொடியேற்றத்துடன் தொடங்கிய வைகாசி திருவிழா


அதன்படி, இந்த ஆண்டு வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக கொடிமரத்தின் அருகே பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளினர் தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வேதமந்திரங்கள் மற்றும் மேளதாளம் முழங்க நந்தியம்பெருமான் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றிப்பட்டப்பட்டது. தொடா்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பாம்பு, அன்னப்பறவை, பச்சைக்கிளி, காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 17-ந் தேதி 5 ஆம் நாள் தன்னைத்தான் வழிபடுதல் நிகழ்வும், காளை வாகனத்தில் இறைவர் மற்றும் இறைவி ஓலைச்சப்பரத்தில் வீதியுலாவும் நடக்கிறது.  7 -ம் நாளான 19-ந் தேதி திருக்கல்யாணமும்,  9-ம் நாளான 21-ம் தேதி கட்டுத்தேரோட்டமும் நடக்கிறது. அதனைதொடர்ந்து  24-ம் தேதி விடையாற்றி நடக்கிறது.