கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கம்பம் வழங்கும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிலையில் 2 கி.மீ தூரம் கம்பத்தை ஊர்வலமாக தோளில் சுமந்து வந்தனர்.


 


 




 


கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு  (மே 12ம் தேதி) திருவிழா தொடங்கி, வரும் ஜூன் 29ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறுகிறது.  இதனையொட்டி 3 கொப்புகள் (கிளைகள்) கொண்ட வேப்பமரம் பரம்பரை மூப்பன்களால் வெட்டி எடுக்கப்பட்டு பாலாம்மாள்புரம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. பாலம்மாள்புரத்தில் உள்ள விநாயகர் கோயில் அருகே கம்பத்திற்கு வேப்பிலை சுற்றப்பட்டு, பக்தர்கள் தண்ணீர், பால் ஊற்றி, மஞ்சள், குங்குமம் இட்டு வழிபட்டனர்.


 


 




 


கம்பம் செல்லும் வழியில் கம்பத்திற்கு முன்பாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் உற்சாக நடனமாடியவாறு சென்றனர். பாலமாபுரத்திலிருந்து ஐந்து ரோடு, கருப்பாய்க் கோவில் தெரு, வாசுகி மஹால், கச்சேரி பிள்ளையார் கோவில் தெரு, ஜவஹர் பஜார் கடைவீதி வழியாக தேர் வீதி கரூர் மாரியம்மன் கோயிலுக்கு கம்பம் கொண்டு செல்லப்பட்டது. பாலம்மாள்புரத்தில் இருந்து மாரியம்மன் கோயில் வரை ஏராளமான பக்தர்கள் கம்பத்தை பின்தொடர்ந்து சென்றனர். மேலும், வழி நெடுகிலும் பக்தர்கள் சாலையோரம் காத்திருந்து கம்பத்தை வழிபட்டனர். 


 




 


ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்ட கம்பம் கரூர் மாரியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கம்பத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்தை தரிசித்தனர். பக்தர்களுக்கு மோர், ஐஸ்க்ரீம், கம்பங்கூழ், உணவு, தண்ணீர் பாக்கெட் ஆகியவற்றை பலரும் வழங்கினர். இதில் பாதுகாப்பு பணிக்காக 200க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.


 




 


தொடர்ந்து மாரியம்மன் கோயிலில் இருந்து கம்பம் மாலை அமராவதி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அமராவதி ஆற்றில் இருந்து கருப்பாயி கோயில் தெரு, ஜவஹர் கடைவீதி வழியாக மாரியம்மன் கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டு கரூர் மாரியம்மன் கோயிலில் கம்பம் நடப்பட்டு நாள்தோறும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.