தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவில் 5-ம் நாளில் நடைபெற்ற நற்கருணை பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.




தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் 441-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் காலை திருயாத்திரை திருப்பலிகள், இளையோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பு மக்களுக்கான சிறப்பு திருப்பலிகளும். மாலையில் செபமாலை, மறையுரை நற்கருணை ஆசீரும் நடைபெற்று வருகிறது.




இந்நிலையில் 5-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு  ஆயர் ஸ்டீபன் தலைமையில் புதுநன்மை திருப்பலி நடைபெற்றது. இதில் பள்ளிக் குழந்தைகளுக்கு முதல் திருவிருந்தை ஆயர் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு பங்கு மக்கள் சார்பில் திருயாத்திரை திருப்பலிகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு முன்னாள் ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் பேராலய உபகாரிகளுக்கான  சிறப்பு திருப்பலி நடைபெற்றது.தொடர்ந்து காலை 11.30 மணிக்கு மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அப்புசாமி  தலைமையில் மறைமாவட்ட துறவியருக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 




மாலை 6.15 மணிக்கு செபமாலை வழிபாடும், அதைத் தொடர்ந்து ஆயர் ஸ்டீபன் தலைமையில் நற்கருணை பவனியும் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நற்கருணையை ஆயர் ஸ்டீபன் கையிலேந்தி, பெரிய கோயில் தெரு, செயின்ட் பீட்டர் தெரு, மணல் தெரு, விக்டோரியா தெரு, கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பவனியாக எடுத்து வந்தார். தொடர்ந்து பேராலயத்தில் மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெற்றது. நற்கருணை பவனி மற்றும் நற்கருணை ஆசீரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.




விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்கத்தேர் பவனி வருகிற ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி நடக்கிறது. விழாவையொட்டி அதிகாலை 5.15 மணிக்கு பெருவிழா கூட்டுத் திருப்பலியும், காலை 7 மணிக்கு தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. தங்க தேர் திருப்பலியை கோவா உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினாய்க் பிலிப் நேரி நடத்துகிறார். அதுபோல் தங்கத்தேர் பவனியை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஜெபம் செய்து தொடங்கி வைக்கிறார்.





இதனை தொடர்ந்து முக்கிய வீதிகளில் அன்னையின் தங்கத் தேர் பவனி நடக்கிறது. மதியம் 12.30 மணிக்கு தங்கத் தேர் நன்றி திருப்பலியும், மாலை 4 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியன நடக்கிறது. விழாவில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள், பங்குத்தந்தைகள் பங்கேற்று சிறப்பு திருப்பலி நடத்துகின்றனர். மேலும் இந்த விழாவில் வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை சார்பில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டு வருகின்றன.