சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்த வாராப்பூர் எனும் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் இஸ்லாமியர் குடும்பங்கள் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வருகின்றன. இந்த வாராப்பூர் கிராமத்தில் மொஹரம் பண்டிகை இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது இந்துக்களும் இணைந்து நடத்துகின்றனர்.
இந்த கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு முன் 3 இஸ்லாமியர் குடும்பங்கள் மட்டுமே வசித்தனர். தங்களது வாழ்வாதாரத்தை பார்த்துக்கொண்டு மொஹரம் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாமல் தவித்த போது நாங்கள் இருக்கிறோம் சேர்ந்து கொண்டாடுவோம் என்று இந்துக்கள் தோள்கொடுத்தனர். அன்று முதல் பண்டிகைக்கு தேவையான செலவுகள், உதவிகள், ஒருங்கிணைப்புகள் என்று அனைத்தையும் இந்துக்கள் முன் வந்து நடத்தி இன்று வரை மொஹரம் பண்டிகையை ஊர் திருவிழாவாகவும் சமூகநல்லிணக்க விழாவாகவும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த அன்பும், பண்பும், பாசமும்,உறவும் இன்று வரை தொடர்ந்து வருகிறது. இப்போது 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தாலும் அன்று போலவே இன்றும் மொஹரம் பண்டிகையில் இந்துக்களின் பங்கு இருக்கவேண்டும் என்று விரும்புவதால் தங்களது உறவினர் போன்ற இஸ்லாமியர்களுக்காக மொகரம் பண்டிகையை இந்துக்கள் நடத்துகின்றனர்.
இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான மொஹரம் பண்டிகை திருவிழாவிற்காக கடந்த வாரம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அன்று முதல் இந்துக்கள் விரமும், இஸ்லாமியர்கள் நோன்பு இருந்தனர் தினமும் இரவில் பெண்கள் கும்மியடித்து பாட்டு பாடுதல் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் திருவிழாவிற்காக 3 அடி பள்ளம் வெட்டி விறகுகள் இட்டு அக்கினி குண்டம் வளர்த்து பூக்குண்டத்தை சுற்றி மின்னொளியால் அலங்கரித்தல் என அனைத்தையும் இந்துக்களே தயார் செய்தனர்.
விரதமிருந்த ஆண்கள் பள்ளிவாசல் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மதநல்லிணக்க பூக்குழியில் தீன் தீன் என்று சொல்லி மூன்று முறை இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் பூ மொழுகுதல் எனும் நிகழ்ச்சியில் தலையில் கனமான துணியை போர்த்தியபடி, நெருப்பு கங்குகளை தலையில் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதை தொடர்ந்து மின்னொளி அலங்கார சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்ட அஸ்ஸனா, உஸ்ஸனா, பாத்திமா நாச்சியாரின் உருவங்கள் வைக்கப்பட்டு சப்பர திருவீதி உலா வானவேடிக்கைகளுடன் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சி வாராப்பூர் கிராமத்தை பொறுத்தவரை இந்த மொகரம் பண்டிகை தங்களது கிராம விழாவாகவும், சமூக மதநல்லிணக்க விழாவாகவும் கொண்டாடி வருகின்றனர். இந்த கிராமத்தில் பிறந்தவர்கள் எங்கிருந்தாலும் இந்த விழா சமயத்தில் தவறாமல் வந்து கலந்து கொண்டு விழாவை கண்டுகளிக்கின்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.