தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது. தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்த ஆண்டு தங்கத் தேரோட்டம் நடக்கிறது. இது 16-வது முறையாக நடைபெற உள்ள தங்கத்தேரோட்டம் ஆகும். அன்று பனிமயமாதா தங்கத்தேரில் எழுந்தருளி நகரை வலம் வருகிறார். இதனை முன்னிட்டு தங்கத்தேரை எழில்மிகு கலைநயத்துடன் அலங்கரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.




கடந்த 1806-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முதன் முதலாக தங்கத்தேரில் அன்னை நகரில் பவனி வந்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக முக்கிய விழாக்களை மையமாக கொண்டு தங்கத்தேரோட்டம் நடந்தது. பனிமயமாதா ஆலயத்துக்கு சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் வந்து வழிபட்டு செல்கின்றனர். அன்னையின் திருவிழா ஆண்டுதோறும் சமய நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.




இந்த ஆண்டு தேரோட்டத்துக்கான தங்கத்தேரின் ஒவ்வொரு வடிவமைப்பும் பல வரலாறுகளை கூறும் வகையில் அமைந்து உள்ளது. அன்னையின் மங்கள மாலையான ஜெபமாலையை நினைவுகூரும் வகையில் 53 அடி உயரத்தில் தங்கத்தேர் அமைக்கப்பட்டு உள்ளது. பொதுவாக மற்ற ஆலயங்களில் நடைபெறும் தேரோட்டத்தில் பீடத்தில் உள்ள சொரூபத்தை தேரில் எடுத்து செல்வது கிடையாது. ஆனால் பனிமயமாதா ஆலயத்தில் அன்னையின் சொரூபம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனியாக கொண்டு வரப்படுகிறது. இந்த தேரின் மேல் பகுதியில் ஒரு நட்சத்திரம் அமைக்கப்பட்டு உள்ளது. இது அன்னை கடலின் நட்சத்திரம் என்பதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.




அன்னையை சுற்றிலும் 9 கோள்கள் இருப்பதை குறிக்கும் வகையில், அன்னையை சுற்றி 9 மீன்கள் உள்ளன. மேலும் அன்னைக்கு தங்க கிரீடமும் அணிவிக்கப்பட்டு உள்ளது. பனிமயமாதா பூமி மற்றும் ஆகாயத்தின் ராணி என்பதை குறிக்கும் வகையில் இந்த கிரீடம் அமைக்கப்பட்டு உள்ளது. 12 அப்போஸ்தலர்களை குறிக்கும் விதத்தில் தேரில் 12 தூண்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 6 சக்கரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.




தங்கத்தேரின் 4 மூலைகளிலும் 4 கிளிகள் உள்ளன. அதேபோன்று மீனவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மனித தலையும், மீன் உடலும் கொண்ட கடல்கன்னிகளின் உருவமும், 2 காளைகளும் பொருத்தப்பட்டு உள்ளன. தேர் முழுவதும் பல்வேறு ரத்தின கற்களாலும், சிற்பங்களாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. இந்த தங்கத்தேரில் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி பனிமய அன்னை தூத்துக்குடி நகரில் வலம் வருகிறார்.




தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா தங்கத்தேரோட்டத்தையொட்டி சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்து இருந்தார். இதனை ஏற்று சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டு உள்ளது.  (ஆகஸ்டு) 3-ந்ேததி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06005) மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் ஆகஸ்டு 4-ந்தேதி தூத்துக்குடியில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06006) மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு சென்னையை சென்றடைகிறது.