திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில் பங்குனி தேரோட்டம் தேதி அறிவிப்பு

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் -அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Continues below advertisement

திருவானைக்காவல் அல்லது திருஆனைக்கா எனப்படும் திருவானைக்கோவில் திருச்சி மாநகரில் அமைந்துள்ள காவிரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனைத் திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதைப் பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 60-ஆவது சிவத்தலமாகும். மேலும் சுமார் 2500 வருட மிகவும் பழமையான இந்தக் கோயிலுக்கு வந்து இறைவனையும் இறைவியையும் வணங்கி வழிபடத் திருமணத் தடைகள் நீங்கும், சகல தோஷங்கள் விலகும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை உண்டு. இத்தகைய புகழ்பெற்ற பஞ்சபூதங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

Continues below advertisement


அதன்படி இந்தாண்டுக்கான விழா  காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை 7 மணி அளவில் சுவாமி, அம்மன், விநாயகர், சோமஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே வந்தனர். கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பின் காலை 7.25 மணி அளவில் கும்ப லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வருகிற 18-ந் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும், 19-ந்தேதி சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்திலும், 20-ந்தேதி பூத வாகனத்திலும், காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், 22-ந்தேதி வெள்ளி ரிஷபவாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். 


மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 24-ந்தேதி வெள்ளிமஞ்சத்திலும், 25-ந்தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 26-ந்தேதி அதிகார நந்தி வாகனத்திலும், சேஷவாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். 27-ந்தேதி காலை நடராஜர் புறப்பாடு, நண்பகல் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை வெண்பட்டு, வெண்மலர்கள் சாற்றி கொண்டு ஏகசிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். ஏப்ரல் 6-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். 7-ந்தேதி சாயாஅபிஷேகம், 8-ந் தேதி மண்டலாபிஷேகத்துடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement