கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவை மாநகரின் காவல் தெய்வம் என அழைக்கப்படும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில், கோவை மாநகரின் மையப் பகுதியான டவுன்ஹால், மணிக்கூண்டு அருகே அமைந்துள்ளது. கோவை மாநகரமே இத்திருக்கோயிலை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருள்மிகு கோனியம்மனை தரிசிக்க வந்து செல்கின்றனர். இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் நடைபெறும் திருத்தேரோட்டம், வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 14ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பின்னர் 20ம் தேதி கிராம சாந்தி விழா நடந்தது. இதைத்தொடர்ந்து கொடியேற்றம், அக்னிசாட்டு நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கோவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கடந்த 22-ம் தேதி முதல் 27ம் தேதி வரை கோனியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாவித்தார். பின்னர் நேற்ற்ய் மாலை கோவில் வளாகத்தில் கோனியம்மன் திருக்கல்யாணம் பக்தர்கள் சூழ வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மதியம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ராஜவீதி தேர் திடலில் இருந்து புறப்பட்ட திருத்தேரானது ஒப்பணக்கார வீதி, கருப்பக்கவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக சென்று மீண்டும் தேர்த்திடலை வந்தடைந்தது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கோயம்புத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை வழங்கினர். கோனியம்மன் கோவில் தேரோட்டம் காரணமாக கோவை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு மக்கள் பாதுகாப்பு 1500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச்சம்பவங்கள் தடுக்க காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக வந்து செல்ல காவல் துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர் திருவிழாவை முன்னிட்டு எல்லா பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. தேர் செல்லும் 4 தெருக்களிலும் சிசிடிவி கேமராக்கள் உள்ளது. 25 இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குற்றங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்