திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழாவின் 5-ம் நாளான குடைவரை வாயில் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் காலையும், இரவிலும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருவிழாவின் ஐந்தாம் நாளான மேலக்கோயிலில் சுவாமி குமரவிடங்கப்பெருமானும், தெய்வானை அம்மனும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி, குடைவரை வாயில் தீபாராதனை நடைபெற்றது. அப்போது எதிர்சேவையாக தங்கச்சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய ஸ்ரீ ஜெயந்திநாதருக்கும் தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமியும், அம்மனும் தனித் தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
திருவிழாவில் 7-ம் நாளான சிவப்பு சாத்தி கோலத்திலும், 8-ம் நாளான மார்ச் 4-ம் தேதி பச்சை சாத்தி கோலத்திலும் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 10-ம் நாளான வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது. 7-ம் தேதி இரவில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 12 நாட்கள் நடைபெறும் விழா வரும் 8-ம் தேதியுடன் நிறைவடைகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
ஆண்டு தோறும் திருச்செந்தூர் மாசித் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி காவடி, மலர் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து திருச்செந்தூருக்கு வருவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் பல்வேறு காவடி எடுத்து குமரி மாவட்ட பக்தர்கள் திருச்செந்தூர் வந்துள்ளனர். இவர்கள் பறக்கும் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக கோயிலுக்கு சென்று வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்