சோழர்களின் குல தெய்வமாகவும் போர்க்கடவுளாகவும் விளங்கியவள் வெக்காளி எனும் கொற்றவை. இவள் வெற்றியை அருளும் வீரதேவியாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நீதியரசியாக, குறைகளைத் தீர்க்கும் குலதேவியாக. தீமைகளை அழிக்கும் ஸ்ரீதுர்கையாக சுருங்கச் சொல்லின் பக்தர்களின் தாயாக விளங்குபவள் வெக்காளி. உறையூர், வாகபுரி, கோழி, உறந்தை, வேதபுரம், வாரணம், முக்கீசபுரம், தேவிபுரம், உரகபுரம் என்றெல்லாம் வழங்கப்படும் உறையூர் இன்று திருச்சி மாநகரின் அங்கமாக உள்ளது. முன்பு முற்கால சோழர்களின் தலைநகரமாக மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் நிறைந்த விண்ணகரமாக விளங்கியது என்று வரலாறு சொல்கிறது. உறையூரின் வடக்கே காவல் தெய்வமாக இந்த வெக்காளி வெட்டவெளியில் வானமே கூரையாக, மேகங்களே திருவாசியாக, மழையே அபிஷேகமாக, நட்சத்திரங்களே மலர்களாகக் கொண்டு எழுந்தருளி இருக்கிறாள். சாரமாமுனிவர் உறையூரில் செவ்வந்தி தோட்டத்தை பராமரித்து வரும் காலத்தில், அந்த மலர்களை அரசனுக்காக எடுத்து சென்றுவிட்டான் பிராந்தகன் எனும் வணிகன். முனிவர் மன்னனான வன்பராந்தகனிடம் முறையிட அவன் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் கோபமான சாரமாமுனிவர் தாயுமான சுவாமியிடம் முறையிட்டார். ஈசன் கோபமாகி மேற்கு நோக்கித் திரும்பி உறையூரையும் அங்கிருந்த மன்னன் அரண்மனையும் மண் மழை பொழிய வைத்து அழித்தார். இதனால் வீடிழந்த மக்கள், சோழர்களின் காவல் தேவியான கொற்றவையை சரண் அடைய, அவள் இந்த ஊர் மக்களின் காவலுக்காக இங்கே வெட்ட வெளியில் எழுந்தருளி மக்களைக் காத்தாளாம். அன்று அவள் அமர்ந்த இடத்திலேயே இன்னும் அருள்பாலித்துக் கொண்டு மேலே விமானமோ விதானமோ இல்லாமல் இருந்து வருகிறாள் என்கிறது கோயில் புராணம்.


 






 


இத்தகைய சிறப்பு வாய்ந்த சக்தி தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அம்மன் கேடயம், பூதவாகனம், கயிலாயவாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், யானைவாகனம், அன்னவாகனம், குதிரை வாகனம் என்று ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான 14-ந்தேதி காலை நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 11-ம் திருநாளான நேற்று பிற்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.







மேலும் இரவு 7 மணிக்கு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதைத்தொடர்ந்து காப்பு கலைதல் மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் லெட்சுமணன், துணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.