திருச்சி மாநகரில் பிரசித்தி பெற்ற பல கோவில்கள் அமைந்திருந்த போதிலும் பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில். இந்தக் கோவிலில் ஆண்டின் அனைத்து நாட்களும்   ஏதாவது ஒரு திருவிழா நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இருந்தாலும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பெருமாளை அருகிருந்து சேவித்தால் மறுஜென்மம் கிடையாது என்பது ஐதிகம். வைகுண்ட ஏகாதசியை  திருஅத்யயன உற்சவம் எனவும் அழைப்பர். பூலோகம் முழுவதும் 108 வைணவ திருத்தலங்கள் இருந்த போதிலும்  காவிரித்தாயின் மடியில்  கொள்ளிடம் ஆற்றுத்தீவில் அமைந்திருப்பது ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோயிலில், இங்கு 365 நாட்களுமே  விழாக்களுக்கு பஞ்சமிருக்காது வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை நடைபெறும் பெருமாள் புறப்பாட்டைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் ஸ்ரீரங்கம் வருவது வழக்கம். இந்த புறப்பாட்டு நேரத்தில் பெருமாளை அருகிலிருந்து பார்க்க விரும்புபவர்களுக்கு சிறப்பு கட்டணமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்விழா அடுத்த ஆண்டு 2023 ஜனவரி 2ம் தேதி  நடைபெற உள்ளது. அன்றே பரமபதவாசல் திறக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக நடை முறையில் இருந்த பெருமாள் புறப்பாட்டு நேர தரிசன கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.




இந்நிலையில்  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் கட்டணத்தை இந்து சமய அறநிலை துறை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கோவில் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது,  கடந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழாவின் போது கிளி மண்டபத்திலிருந்து தரிசனம் செய்ய ஒரு நபருக்கு ரூ. 500, சந்தனு மண்டபத்தில் இருந்து ஊர்வலத்தை தரிசிக்க ரூ.3000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நடப்பு ஆண்டில் சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 500 லிருந்து ரூ.1000 ஆகவும், ரூ.3000 கட்டணத்தை ரூ. 5000 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு பின்னர் இப்போது தரிசன கட்டணம் உயர்த்தப்படுகிறது.  இந்தக் கட்டண உயர்வு தொடர்பாக கருத்து தெரிவிக்க பக்தர்களுக்கு நேற்றைய தினம் வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் யாரும் நேரடியாக வந்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆகவே திட்டமிட்டபடி கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர்" என்றனர்.


மேலும் கோவில் நிர்வாக தரப்பில் கூறுகையில், சலுகை அடிப்படையில் வழங்கப்படும் டிக்கெட்டை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பது இதன் மூலம் தடுக்கப்படும். அது மட்டுமல்லாமல் தற்போதைய சூழலில் இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 300 டிக்கெட்டுகள் சந்தனு மண்டபத்தில் இருந்தும், 1000 டிக்கெட்டுகள், கிளி மண்டபத்தில் இருந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்த கட்டண உயர்வு இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. வி.ஐ.பி. தரிசனத்திற்கு அதிக நேரம் ஒதுக்குவதால் சாதாரண பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும் பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2019-க்கு பின்னர் கோவிட் கட்டுப்பாடுகள் இல்லாமல் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது.