மீனை அக்கம்பக்கத்தினர், நண்பர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இதனால் கிராமங்களில் மீன்குழம்பு வாசனை கமகமத்தது.


மதுரை மீன்பிடி திருவிழா


மதுரையில் கிடாய் விருந்து, சேவல் சண்டை, கிடாய் முட்டு போட்டி, ஆண்கள் மட்டும் பங்கேற்கும் அசைவ விருந்து என பல்வேறு வித்தியாசமான திருவிழாக்கள் நடைபெறும். இதில் முக்கியமானது மீன்பிடி திருவிழாவும் ஒன்று. விவசாயத்துடன் கலாச்சாரம் சார்ந்து இந்த மீன்பிடி திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் திருவாதவூர், வெள்ளரிப்பட்டி, மேலவளவு, குருத்தூர், கள்ளந்திரி உள்ளிட்ட பல கிராமங்களில் மீன்பிடி திருவிழா நடைபெறும். இந்நிலையில் பாரம்பரியமிக்க கள்ளந்திரி மீன்பிடி திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.


கள்ளந்திரி மீன்பிடி திருவிழா


மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள கள்ளந்திரி கிராமத்தில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடைபெறும். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய பின் மீண்டும் அழகர்மலைக்கு வந்து சேர்ந்த பின்னர், கிராம மக்கள்  ஒன்றுகூடி மீன்பிடி திருவிழாவிற்கு நாள் குறிப்பார்கள். அப்படியாக நாள் குறிக்கப்பட்டு இன்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. கள்ளந்திரி, அம்மச்சியாபுரம், தொப்புலான்பட்டி உள்ளிட்ட 5 கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட ஐந்து கோயில் முத்தன் கண்மாய் உள்ளது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கண்மாயில் ஐந்து கோயிலில் வேண்டுதல் நிறைவேறியவர்கள் மீன் குஞ்சுகளை காணிக்கையாக வாங்கிவிடுவர். ஆண்டுதோறும் இந்த கண்மாயில் அனைவரும் வேறுபாடுகளின்றி மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவர்.


மீன்குழம்பு வாசனை


ஆனால் கடந்தாண்டு முல்லை பெரியாறு அணையில் இருந்து தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கண்மாய் முழு கொள்ளளவை எட்ட தாமதமானது. தொடர்ந்து இந்த ஆண்டும் மீன்பிடித் திருவிழாவும் தாமதமாக நடைபெற்றது. அதன்படி மீன்பிடித் திருவிழா நடைபெறும் என சுற்றுவட்டாரப் பகுதியில் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு இன்று காலை மீன் பிடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நத்தம், மேலூர், அலங்காநல்லூர், சத்திரப்பட்டி, சிங்கம்புனரி,  உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே காத்துக் கிடந்து கிராமப் பெரியவர்கள் வந்து வெள்ளை வீசி அனுமதி அளித்தவுடன் மீன்களை பிடிக்க துவங்கினர். அப்போது சிலருக்கு பெரிய அளவிலான மீன்கள் சிக்கின. அவை 1 கிலோ முதல் 5 கிலோ வரை இருந்தது. இதில், ரோகு, கட்லா, ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பொதுமக்கள் பிடித்தனர். எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மீன்கள் கிடைத்ததால் மீன்பிடி திருவிழாவிற்கு வந்திருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அவற்றை வீட்டிற்கு கொண்டு சென்றனர். பின்னர் வீடுகளில் மீன்குழம்பு வைத்து சாப்பிட்டனர். இதேபோல் மீனை அக்கம்பக்கத்தினர், நண்பர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இதனால் கிராமங்களில் மீன்குழம்பு வாசனை கமகமத்தது.


சமத்துவ திருவிழா


கண்மாயில் உள்ள மீன்களை விற்பனை செய்யாமல், இது போன்று பொதுமக்கள் சமத்துவத்தோடு பிடித்துச் செல்ல அனுமதிப்பதன் மூலம் நல்ல மழை பொழிந்து, விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்களும் கண்டு ரசித்தனர். இந்த மீன்பிடி திருவிழா மதுரை சம்பவம் உள்ளிட்ட திரைப்படங்களில் படமாக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ்- Seanz Cruise: ECR -இல் புதிய மகுடம்; முட்டுக்காட்டில் மிதக்கும் உணவகம்! சென்னையில் சூப்பரான ஸ்பாட் ரெடி..