நெல்லையப்பர் கோயிலும், பழமையும்:
தென்மாவட்டங்களில் மிகவும் பழமையான சைவத்திருத்தலமாகவும், திருவாசகம் பாடப்பட்ட திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் நெல்லையப்பர் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவத் தொண்டாற்றிய திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற சைவத் திருதலமாக இந்த கோவிலில் உள்ள மூலவர் நெல்லையப்பர், சுவாமி வேணுநாதர், நெல்வேலி நாதர் என்று பல பெயர்களில் அழைப்படுகிறார். இங்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனியாக கோவில்கள் எழுப்பப்பட்டு அம்பாள் சந்ததியில் ஆயிரம் கால் மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் 3 பிரகாரங்கள் உள்ளது. மேலும் இக்கோவிலில் ஆனித் திருவிழாவும், ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவும் முக்கிய விழாக்களில் ஒன்றாகும். இதில் ஆனித் தேரோட்டம் என்பது மிகவும் சீறும் சிறப்புமாக கொண்டாடப்படுவதோடு வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து இவ்விழாவில் கலந்து கொள்வார்கள்.
மூன்றாவது பெரிய தேரும் அதன் சிறப்பம்சமும்,
நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆனித் தேரோட்டம் 40 நாட்கள் நடைபெறும் பெருந்திருவிழா என பெயர் பெற்றது. ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர்களும், சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தின் போது ரத வீதிகளில் வலம் வரும். இந்த தேர் கடந்த 1505 ஆம் ஆண்டு செய்யப்பட்டது. திருவாரூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் தேர் இயந்திரங்களின் துணையுடன் இயக்கப்படும் நிலையில் அதற்கு அடுத்தப்படியாக 3 வது பெரிய தேரான நெல்லையப்பர் கோவில் தேர் முழுக்க முழுக்க மக்கள் சக்தியால் மட்டுமே இயக்கப்படுகிறது. சுமார் 450 டன் எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் திருத்தேர் 90 அடி உயரம் கொண்டது. இந்த தேர் ஒவ்வொரு வருடமும் சறுக்குக் கட்டை போடுதல், தடி போடுதல் ஆகியவற்றின் மூலம் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், பெரியோர்கள் என அனைவரும் ஓம் நமச்சிவாய உள்ளிட்ட கோசங்களுடன் இழுக்கும் போது தேர் மக்கள் வெள்ள கூட்டத்தில் ஆடி அசைந்து வருவதை காண கண்கோடி வேண்டும்.
தேர் சுத்தம் செய்தல்:
இந்த நிலையில் ஆனிப்பெருந்திருவிழாவான தேரோட்ட திருவிழா வரும் 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 21 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழலில் நெல்லை மற்றும் பேட்டை பகுதி தீயணைப்பு துறையினர் சார்பில் திருக்கோவிலின் குடவரை வாயில் மண்டபத்தில் அமைந்துள்ள மரசிற்பங்கள், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் திருத்தேர்களை தீயணைப்பு துறை வாகனம் மூலம் சுமார் 13,500 லிட்டர் தண்ணீரை நவீன மோட்டார்கள் மூலம் தேரின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்யும் பணி இன்று துவங்கியது. பெரிய தேரின் தட்டுகளில் ஏறி ஒவ்வொரு தட்டுக்களாக தண்ணீரை பீய்ச்சியடித்து மர சிற்பங்களையும் சுத்தம் செய்தனர். மேலும் இத்திருவிழாவிற்காக ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்படும். அதன்படி இந்தாண்டும் 21 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை ஈடு செய்யும் வகையில் 29 ஆம் தேதி வேலை நாளாக அறிவித்து ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பும் வெளியிட்டுள்ளார். இந்திருவிழாவை கொண்டாட நெல்லை மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.