உலகத்தில் உள்ள அனைத்து இந்து மக்களின் மத நம்பிக்கையின் படி ஆடிமாதம் என்பது உலகையே காக்கும் சிவபெருமானுக்கே சக்தியை வழங்கும் நாள் அதிலும் முக்கியமாகனது அம்பாளுக்கு உகந்த மாதம் என்பதால், ஆடி மாதம் முழுவதும், அம்மனுக்கு திருவிழா எடுத்தும் தீ மிதித்தும், தீச்சட்டி எடுத்தும், தீய சக்திகள் மற்றும் பஞ்சம் மக்களை நெருங்காது என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் ஆடி மாதத்தில் திருமண நிகழ்ச்சி மற்றும் திருமண நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுப காரியங்கள் செய்தால் அம்மனின் கோவத்திற்கு ஆளாகிவிடுவார்கள் என்ற நம்பிக்கையும் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இப்படி 'ஆடிமாதம் என்றாலே அம்மனின் மாதம்' என்று சொல்லும் அளவுக்கு, அம்மன் கோவில்களில், கூழ் ஊற்றுதல், தீ மிதிப்பது போன்ற திருவிழாக்கள் அதிகளவில் நடத்தப்பட்டு வருகிறது . இந்த மாதத்தில் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளையும் , அம்மனுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது , மக்களின் வழக்கமாகவே உள்ளது.
இதுபோலவே , திருவண்ணாமலை மாவட்டம் களர்பாளையம் பகுதியில் உள்ள 15 அடி உயரமுள்ள ஒரு வேப்பமரத்தில் நிகழ்ந்த விஷயத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் வேப்பமரத்தின் பகுதியில் சென்று கொண்டு இருந்தனர் அப்போது, வேப்பமரத்தில் இருந்து திடீரென்று வெள்ளை நிறத்தில் பால் போன்ற ஒரு திரவம் அவர்கள் மேல் சொட்ட விழ ஆரம்பித்துள்ளது . அங்கு இருந்தவர்கள் அதனைக் கண்டு வியப்படைந்தனர், வேப்பமரத்தில் இருந்து வெள்ளை நிறத்தில் பால் போன்று இனிப்பு தன்மை வாய்ந்த பால் கொட்டுவதை கண்டு ஆச்சரியமடைந்தனர். மேலும் வேப்பமரத்தை அம்மனாக கருதி சேலை கட்டி, மஞ்சள் பூசி, சிவப்பு , பால் , மஞ்சள் கொண்டு, சந்தனம்,பன்னிர் , உள்ளிட்டவைகளை கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் மாலை அணிவித்து பூஜை செய்தனர். அதுமட்டுமின்றி பொங்கல் வைத்து படையலிட்டனர். இந்த தகவல் சிறிது நேரத்தில் கிராமம் முழுவதம் பரவியது. இதனால் கிராம மக்கள் வேப்ப மரத்தின் அருகே குவிந்து அம்மன் இந்த மரத்தில் உள்ளதாக தெரிவித்து வேப்ப மரத்தில் அம்மனின் புகைப்படத்தை கட்டி கற்பூரம் ஏற்றி வணங்கினர். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வேப்ப மரத்தில் பால் வடிவது ஏன்?
இந்த பகுதியில் இருக்கும் மக்கள் , வேப்பமரத்தில் இருந்து வழிந்த இனிப்பான பால் அம்மனின் பிரசாதம் என்று நம்பிக்கையில் இருக்க வேலூரை சேர்ந்த தாவரவியல் பேராசிரியர் ஒருவர் இந்த சம்பவத்திற்கு அறிவியல் பூர்வமாக வேறு விளக்கத்தை தந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “பொதுவாக வேப்பமரத்தில் உள்ள மாவுச்சத்தை, வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும் . இந்த நேரத்தில் வேப்பமரத்தின் வேர்களுக்கு அதிகப்படியான தண்ணீர் கிடைத்தால், தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப் பட்டையின் அடியிலுள்ள திசு பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்து , மரத்தின் பட்டைகளை பிளந்துகொண்டு இனிப்புப் பால் போன்று வடியும். மரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறையும்போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபட்டு, பால் போன்ற திரவியம் வடிவது நின்றுபோகும். இது வேப்பமரத்தின் இயல்பான தன்மைதான், அம்மன் இறங்கியுள்ளார் என்பதெல்லாம் மக்களின் நம்பிக்கை மட்டுமே" என்று தெரிவித்தார் .