மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தை 14 -ஆம் நூற்றாண்டில் தோற்றுவித்த ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகளின் குருபூஜை ஆண்டுதோறும் தை மாதத்தில் நமசிவாயமூர்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை என 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குருபூஜை கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பத்தாம் நாளான, குருபூஜை விழா, மாகேஸ்வர பூஜை ஆகியன நடைபெறும். அதனை தொடர்ந்து ஆதின கர்த்தரை பல்லக்கில் சுமக்கும் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி இரவு நடைபெறும்‌.




இந்நிலையில் கடந்த ஆண்டிற்கும் முந்தைய ஆண்டு பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்த திராவிடர் கழகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். நவீன யுகத்தில் பட்டணப்பிரவேசம் என்ற பெயரில் மனிதனை மனிதன் சுமக்கும் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று கூறி திருவாவடுதுறை ஆதீன நுழைவு வாயிலின் முன்பு திராவிடர் கழக மாநிலப் பொதுச்செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை தமிழ் புலிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அப்போதைய மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், காவலர்கள் கலைந்துபோகச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தினர். 




அதற்கு, திராவிடர் கழகத்தினர் உடன்படாததால், கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர், ஆதீனத் திருமடத்தில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஸ்ரீகோமுக்தீஸ்வர சுவாமி திருக்கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். ஸ்ரீநமசிவாய மூர்த்திகள் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து குருமகா சந்நிதானம் சிவிகாரோஹணம் செய்தருளி பட்டணப்பிரவேசம் எழுந்தருளினார். இதில், சூரியனார்கோயில் கோயில் ஆதீனம் 28 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.




இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில், ஆண்டுதோறும் ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் பெருவிழா, குருபூஜைவிழா, பட்டணப் பிரவேசம் விழா ஆகிய மூன்றும், வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 11 ம் திருநாள் அன்று ஆதீனத்தை தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை விழா மற்றும் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம். இவ்விழாவில் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கி சென்று ஆதீன திருடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி பட்டிணப் பிரவேசம் வலம் வருவது நடைமுறை. 




இந்நிலையில், மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தை அடுத்து கடந்த ஆண்டிற்கும் முந்தைய மே மாதம் பல்லக்குதூக்கும் (பட்டிணப் பிரவேசம்) நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை அப்போதைய கோட்டாட்சியர் பாலாஜி தடைவிதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.




பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து பட்டிணப் பிரவேசம் தடையை நீக்க கோரிக்கை வைத்த நிலையில், பல்லக்கு தூக்கும் நிகழ்விற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்வதாக கடந்த ஆண்டு மே 7-ம் தேதி மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி ஆணைபிறப்பித்தார். இதனால், பட்டிணப் பிரவேசம் நிகழ்வு தமிழகம் முழுவதும் பிரபலமானது. வழக்கமாக கடந்த காலங்களை ஆதீனத்தை சுற்றியுள்ள மக்கள் மட்டுமே குறைவாக கலந்துகொண்ட நிலையில், கடந்த ஆண்டு பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்தனர் உலகளவில் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி பிரபலம் அடைந்தது.




பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகள் நிலவிய நிலையில், டிஐஜி தலைமையில் 2 எஸ்.பி.க்கள் உட்பட 600 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்வேறு தடைகளை கடந்து பட்டிணப் பிரவேசம் விழா கோலாகலமாக நடைபெற்றது. அதில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருஆபாரணங்கள் அணிந்துகொண்டு திருக்கூட்ட அடியவர்கள் புடைசூழ பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் பல்லக்கினை நான்கு கோடி நாட்டாமை தலைமையில் 70 பேர் தோளில் சுமந்த ஆதீனத்தை சுற்றி நான்கு வீதிகளில் வலம் வந்தனர்.  இவ்விழாவில் சைவ ஆதீனங்களான சூரியனார் கோயில் ஆதீனம், மதுரை ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், செங்கோல் ஆதீனம், உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா, பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 3000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து குருபூஜை மடத்தில் வழிபாடு மேற்கொண்டு ஞானகொலுக்காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். 




இந்த சூழலில் கடந்த ஆண்டு இந்த இரண்டு ஆதீனங்களின் பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சி பெரிய அளவில் எதிர்ப்புகள் எழாத நிலையில் எவ்வித இடையூறுகளும் இன்றி பட்டணப்பிரவேசம் விழா நடைபெற்றது. இந்நிலையில் இந்தாண்டும் எதிர்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் இன்றிரவு திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு கடந்த காலங்களில் எதிர்ப்பு தெரிவித்த திராவிடர் கழகத்தினர் இதுவரை எந்த ஒரு எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.