சென்னை புறநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகர் கோயிலாக திருப்போரூர் கந்தசாமி கோயிலாக உள்ளது. மிகவும் புகழ் பெற்ற கோயில் என்பதால், ஏராளமான பக்தர்கள் விடுமுறை நாட்கள் மற்றும் முருகருக்கு உரிய நாட்களில் சாமி தரிசனம் மேற்கொள்ள வருவது வழக்கம். 


உண்டியல் காணிக்கை 


முருகருக்கு ‌ பல்வேறு வேண்டுதல்களை வேண்டி காணிக்கை செலுத்துவது வழக்கமாக உள்ளது. இதில் பக்தர்கள் தாலி பொட்டு கண்மலர், வேல், நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் என உண்டியலில் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப நிரப்பி காணிக்கை செலுத்துவார்கள். ஆறு மாதங்கள் கழித்து இன்று திருப்போரூர் கந்தசாமி கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டது.




இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் குமரவேல் ஆய்வாளர் பாஸ்கரன் முன்னிலையில் இன்று உண்டியல் திறக்கப்பட்டு பணம் என்னப்பட்டது. இதில் 52 லட்சம் ரூபாயும் , 289 கிராம் தங்கமும், 6920 கிராம் வெள்ளியும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தனர்.


கிடைத்த ஐபோன்


பணம் எண்ணிக் கொண்டிருந்தபோது உண்டியலில் விலை உயர்ந்த ஐபோன் கிடைக்கப்பெற்றுள்ளது. அது யாருடைய செல்போன் என்று ஆய்வு மேற்கொண்டதில், சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என தெரியவந்தது. சென்னை சி.எம்.டி.ஏ நிர்வாகத்தில் தினேஷ் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே தினேஷ் கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் தேதி குடும்பத்துடன் கோயிலுக்கு வந்த போது, பணம் போட முயன்ற போது செல்போன் உண்டியலில் விழுந்துவிட்டதாக கோயில் நிர்வாகத்திடமும், அறநிலையத்துறை இடமும் புகார் அளித்திருந்தார். 


முருகனுக்கே சொந்தம்


இதனை அடுத்து அவருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவரும் உண்டியல் என்னும் இடத்திற்கு வந்து செல்போனை பெற முயன்ற போது, கோவில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது. உங்களுக்கு செல்போன் கொடுக்க முடியாது வேண்டுமென்றால் உங்களுடைய தரவுகள் வேறு செல்போனுக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர்.




மீண்டும் கிடைக்குமா போன் ?


செல்போனை பெற்றுக் கொள்ளலாம் என வந்தவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஏற்கனவே இவர் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில், மனு அளித்து எனது செல்போனை மீட்டுக் கொடுக்கும்படி மனு அளித்துள்ளேன் என தெரிவித்ததை தொடர்ந்து, உரிய விசாரணை நடத்தப்பட்டு அதன் பிறகு செல்போன் ஒப்படைப்பது குறித்து அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள் எனக் கூறி அவரை திருப்பி அனுப்பினர். 


இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, செல்போனை ஒப்படைப்பதற்கு சாத்திய கூறுகள் இருந்தால் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.