Tirupati: இந்தியாவின் பணக்கார கோயிலாக திகழ்வது திருப்பதி. புகழ்பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சமீபகாலமாக திருப்பதிக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், ஏழுமலையானை மணிக்கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாமி தரிசனத்திற்கான டிக்கெட் வாங்குவதே சவாலாக உள்ளது. 

எளிதாக ஏழுமலையானை தரிசிப்பது எப்படி?

இந்த நிலையில், சாமி தரிசனத்திற்கான டிக்கெட் வாங்குவதற்கான பலருக்கும் தெரியாத எளிய வழிமுறையை கீழே காணலாம். திருப்பதியில் அலிபெரியில் சப்த கோபிரதட்சண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் தினமும் ஸ்ரீனிவாச திவ்ய அனுகிரக விசேஷ ஹோமம் நடைபெறும். 

இந்த ஹோமம் தினசரி காலை 8 மணிக்கு காலை 11 மணி வரை நடைபெறும். இந்த தரிசனத்தில் பங்கேற்பற்கான டிக்கெட்டை பெற்றால் ஏழுமலையானையும் சாமி தரிசனம் சய்யலாம். இந்த தரிசனத்திற்கான டிக்கெட்டைப் பெற்றால் ஏழுமலையானைத் தரிசிப்பதற்கான 300 ரூபாய் சிறப்பு டிக்கெட்டையும் பெற முடியும். இந்த ஹோமத்திற்கான டிக்கெட்டை பெற்று விட்டு, ஹோமத்தில் பங்கேற்காமல் ஏழுமலையானை தரிசிக்க இயலுமா? என்றால் கண்டிப்பாக இயலாது. 

ஹோம டிக்கெட்டுகள்:

ஏனென்றால், இந்த ஹோமத்தில் பங்கேற்ற பிறகு டிக்கெட்டை ஸ்கேன் செய்யப்பட்ட பிறகே ஏழுமலையானைச் சந்திப்பதற்கான ரூபாய் 300 சிறப்பு தரிசன வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள்.  இந்த ஹோமத்தில் பங்கேற்றால் ஏழுமலையானை தரிசிப்பதற்கான டிக்கெட்டை தரிசனத்தன்று காலையிலோ அல்லது ஒரு மாதத்திற்கு முன்பாகவே பெற்றுக்கொள்ளும் வசதியும் உண்டு.

இந்த ஹோமத்தில் பங்கேற்பதற்கு தினசரி 200 டிக்கெட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதில் 150 டிக்கெட்டுகள் இணையத்திலும், 50 டிக்கெட்டுகள் நேரடியாகவும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அந்த 50 டிக்கெட்டுகளும் இணையத்திலே வழங்கப்பட உள்ளது. 

அதாவது, இனி ஸ்ரீனிவாச திவ்ய அனுகிரக ஹோமத்திற்கான 200 டிக்கெட்டுகளும் இணைய வழி மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக இந்த டிக்கெட்டுகளைப் பெறலாம்.

அலைமோதும் பக்தர்கள் கூட்டம்:

திருப்பதியில் சிறப்பு தரிசனம், பொது தரிசனம், விவிஐபி தரிசனம் என பல தரிசனங்கள் பல கட்டணங்களில் இருந்தாலும் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, விழாக்காலங்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பெருமாளுக்கு உகந்த நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. 

திருப்பதியில் கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதுடன் பலரும் கோடிக்கணக்கான ரூபாய்களை காணிக்கையாகவும் திருப்பதி ஏழுமலையானுக்கு செலுத்தி வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தங்குமிடம், கழிவறை என பல்வேறு வசதிகளும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.