ஆடி மாதம் என்றாலே பக்தர்களுக்கு பரவசம் ஏற்படும். இந்த மாதத்தில் உள்ள ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகவும், பக்திமிக்க நாளாகவும் உள்ளது. ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி என பல விசேஷங்களை கொண்ட இந்த மாதத்தில் ஆடிப்பெருக்கு மிகவும் விசேஷமான நாள் ஆகும்.
தாலி பிரித்துக் கோர்த்தல்:
ஆடிப்பெருக்கு தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக காெண்டாடப்படுகிறது. விவசாயிகள் இந்த நன்னாளில்தான் தங்கள் விவசாயப்பணிகளைத் தொடங்குகின்றனர். அதேபோல, இந்த நன்னாளில் புதியதாக திருமணமான ஜோடிகள் தங்களது தாலியைப் பிரித்து மாற்றிக் கொள்ளும் நிகழ்வான தாலி பிரித்துக் கோர்த்தலும் மிகவும் பிரபலம் ஆகும்.
ஆடி 18-ல் நல்ல நேரம் எது?
நடப்பாண்டிற்கான ஆடி 18 எனும் ஆடிப்பெருக்கு நிகழ்வு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி வருகிறது. இந்த நன்னாளில் புதுமணத் தம்பதிகள் தாலி மாற்றிக் கொள்வது வழக்கம். பொதுவாக, ஒரு நாளில் செய்யும் எந்த சுபகாரியத்தையும் அந்த நாளில் உள்ள ராகுகாலம் மற்றும் எமகண்டத்தில் செய்யக்கூடாது என்று கூறுவார்கள். மேலும், அந்த நாளில் வரும் நல்ல நேரத்தில் செய்வது நல்லது என்பார்கள்.
அதன்படி, பார்த்தால் ஆடிப்பெருக்கு நாளான ஆகஸ்ட் 3ம் தேதி ராகு காலம் மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை வருகிறது. எமகண்டம் மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 வரை வருகிறது. நல்ல நேரமானது காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரையும், மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை வருகிறது.
தாலி மாற்ற ஏற்ற நேரம் எது?
மதியம் 12 மணிக்குள் தாலி மாற்றிக்கொள்வது சிறப்பாகும். ராகு காலமும், எமகண்டமும் மதியத்திற்கு பிறகே வருவதால் காலையில் வரும் நல்ல நேரத்தில் தாலியை புதுமணத் தம்பதிகள் மாற்றிக் கொள்வது சிறப்பாகும். மதியம் 12 மணிக்கு பிறகு சூரியன் மறைய கீழே இறங்குவதால் அதை இறங்குபொழுது என்பார்கள். அதனால், அந்த இறங்குபொழுதில் தாலி மாற்றக்கூடாது என்பார்கள்.
புதிய திருமாங்கல்ய மஞ்சள் கயிற்றை அம்மன் பாதத்தில் வைத்து வழிபட்ட பிறகு, அதை கணவன் மனைவிக்கு கட்டிவிட வேண்டும். பின்னர், புதியதாக திருமணமானவர்கள் இறைவனை வணங்கிய பிறகு பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.
இந்த நன்னாளில் காவிரி கரையில் குறிப்பாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். அப்போது, புதுமண தம்பதிகள் குடும்பத்துடன் காவிரி ஆற்றை வணங்கி படித்துறையிலே தாலி மாற்றிக் கொள்வதும் வழக்கம் ஆகும்.