திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்படுகிறது. 


திருப்பதி ஏழுமலையான் கோவில் 


உலகப்புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகவும், உலக பணக்கார கடவுள்களில் ஒன்றாகவும் கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானமும் பக்தர்களின் வசதிக்காக விஐபி தரிசனம், ரூ.300 சிறப்பு கட்டண தரிசனம், இலவச தரிசனம் என பலவகையான ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்காகவும், லட்டு வழங்கும் மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 


இதனிடையே திருப்பதியில் சிறப்பு கட்டணம் , விஐபிகளுக்கான டிக்கெட்டுகள், பல்வேறு சிறப்பு பூஜைகளில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதத்திற்கான டிக்கெட்டுகளும் அதற்கு முந்தைய மாத கடைசியில் தேவஸ்தானத்தால் வெளியிடப்படும். அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான ரூ.300  சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்படுகிறது. பக்தர்கள் இன்று காலை 11 மணி முதல் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. . 


எப்படி பெறுவது? 


டிக்கெட்டுகளைப் பெற  www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள User ID மற்றும் Password கொடுத்து உங்கள் அக்கவுண்ட் வழியாக உள்ளே நுழைய வேண்டும். பின் ரூ.300  சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்டுக்கான ஆப்ஷனை கிளிக் செய்யவும். உடனடியாக மொபைல் எண் கேட்கப்பட்டும். அதனைக் கொடுத்தப் பின் வரும் ஓடிபி எண்ணை கொடுத்தவுடன் டிக்கெட்டுகள் செல்லும் ஆப்ஷன் திரையில் காட்டப்படும். 


இதில் உங்களுக்கு தேவையான தேதியை கிளிக் செய்து வேண்டிய டிக்கெட்டுகளை பெறலாம். தகவல் பதிவிடும் போது பக்தர்கள் தங்கள் ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும். மேலும் அதில் குறிப்பிடப்படியே பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். 


களைக்கட்டும் ராமநவமி:


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் மார்ச் 30 ஆம் தேதி  ராமநவமி விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 30 ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அன்று மாலை  6.30 மணி முதல் 8 மணி வரை அனுமந்த வாகனத்தில் ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதனிடையே திருச்செந்தூர் முருகன் கோயிலில் சண்முகா அர்ச்சனை கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சண்முகா அர்ச்சனை செய்வதற்கான கட்டணம் ரூ.1,500 இல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.