திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் இறுதி நாளான இன்று 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்துள்ளனர். மேலும் உண்டியல் காணிக்கையாக மட்டும் இன்று 20 கோடியே 46 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், தினமும் காலை, இரவு வேளைகளில் பெரிய சேஷம், சின்ன சேஷம், சிம்மம், அன்னம், முத்து பந்தல், சர்வ பூபாலம், மோகினி அலங்காரம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கஜ வாகனங்களில் எழுந்தருளி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் இறுதி நாளான இன்று 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.  ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வார் ஆகிய உற்சவர்கள் கோயிலில் இருந்து புறப்பட, வராக சாமி கோயில் முக மண்டபத்தில் உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் ஆகியவை நடத்தப்பட்டன.


 






தொடர்ந்து சக்கரத்தாழ்வாரை கோவில் திருக்குளத்துக்குள் எடுத்து சென்ற தேவஸ்தான அர்ச்சகர்கள் மூன்று முறை நீரில் மூழ்கச்செய்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடத்தினர். அதனைத் தொடர்ந்து திருக்குளத்தின் நான்கு புறங்களிலும் காத்திருந்த பக்தர்கள் தாங்களும் திருக்குளத்தில் மூழ்கி புனித நீராடினர்.


திருமலை தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்து மதிப்புகள் பற்றி முன்னதாக திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில்,  திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ரூ.85 ஆயிரத்து 705 கோடி ரூபாய் மதிப்புள்ள 960 சொத்துக்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இவ்வளவு சொத்துக்கள் கோயிலுக்கு சேர்வதற்குக் காரணம் திருப்பதி பாலாஜி மீது பக்தர்களுக்கு உள்ள நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையின் அடிப்படையில், பலரும் பணமாக, நகையாக, பொருளாக, அசையும் மற்றும் அசையா சொத்துக்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.


மதம் கடந்தும் இந்த நம்பிக்கையின் வெளிப்பாடு இருப்பதையும் நாம் காண முடிகிறது. சமீபத்தில் கூட சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 1 கோடியே 2 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர். 


அப்துல் கனி மற்றும் நுபினா பானு எனும் இத்தம்பதி இந்த நன்கொடையாக காசோலையையாக வழங்கினர். சென்னையைச் சேர்ந்த இத்தம்பதியினர் கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகுலா மண்டபத்தில் TTD செயல் அலுவலர் தர்மா ரெட்டியை சந்தித்து இந்தக் காசோலையை வழங்கினர்.