திருச்செந்தூா் அருகேயுள்ள தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனாா் கோயிலில் புகழ்பெற்ற கள்ளா் வெட்டுத் திருவிழா கோலாகலமாக  நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித மணல் எடுத்து சென்றனர்.




தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள  தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார்  கோயில் தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழா மிகவும் புகழ்பெற்றது. மேலும் இந்த கள்ளர் வெட்டுத் திருவிழாவிற்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து புனித மணலை எடுத்துச்செல்வார்கள்.




இந்த ஆண்டுக்கான கள்ளர் வெட்டுத் திருவிழா கடந்த நவம்பர் 17-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாள்களில் தினமும் அய்யனாா் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. கொரொனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த இரண்டு ஆண்டுகள் பின் கள்ளர் வெட்டு திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.பாண்டிய மன்னனிடம் கைகட்டி மனித உருவில் சேவகம் பார்த்தவர்தான் இந்த கற்குவேல் ஐயனார். ஐயானாரின் ஆளுகைப் பகுதிக்குள் நுழைந்து பொருட்களைத் திருடிச் சென்ற திருடனான கள்வரை ஐயனாரின் படைத்தளபதியான வன்னியராஜா வெட்டும் நிகழ்ச்சிதான் கள்ளர்வெட்டு.




கள்ளர் வெட்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளர் வெட்டு நிகழ்ச்சி கோயில் கோவிலுக்குப் பின்புறமுள்ள பரந்து விரிந்த செம்மண் சூழ்ந்த தேரிக்காடு மணல் மேட்டில் குங்குமம் தடவி ரோஜாப்பூ மாலை சுற்றி வைக்கப்பட்டு அதனை சுவாமியாடி ஆக்ரோஷத்துடன் வெட்டும் கள்ளர் வெட்டு நிகழச்சிக்குப் பின், கள்ளர் மீது தண்ணீர் தெளித்து விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் பொதுமக்களின் கடைகளில் திருடி தொல்லை கொடுத்து வரும்  கள்ளர்களை தண்டிக்கும் விதமாக அய்யனார் அருள் வந்து  இளநீரை கள்ளராக பாவித்து  இளநீர்  வெட்டப்பட்டது. கள்ளர் வெட்டுக்குப் பின் பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு இளநீர் வெட்டப்பட்ட தேரிக்காட்டு செம்மண்ணை எடுத்தனர்.




அந்த இளநீர் மண்ணில் பட்ட மணலை பக்தர்கள் புனித மணலாக கருதி பக்தர்கள்  போட்டிபோட்டு தங்கள் வீடுகளுக்கு  எடுத்து சென்றனர். இந்த புனித  மணலை விவசாய நிலத்தில் போட்டால் விவசாயம் செழிக்கும், வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும்  என  பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள்.




மேலும் அனைத்து சுப நிகழ்ச்சிளுக்கும் இந்த புனித மணலை பயன்படுத்துவதால் வாழ்க்கை நலமாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.  இந்த திருவிழாவை முன்னிட்டு கோயில் மற்றும் தேரிப்பகுதியில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 400- காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.