வைகுண்ட ஏகாதசி:


பெருமாளுக்கு உகந்த மாதமான மார்கழியில் ஆண்டுதோறும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி 2023ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.


வைகுண்ட ஏகாதசியை  திருஅத்யயன உற்சவம் எனவும் அழைப்பர். சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி இந்த நாளில் பக்தர்களுக்கு தரிசனம் தரும் பெருமாளை இரவு முழுவதும் கண் விழித்தும், விரதமிருந்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.


புராண கதை:


பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ஆகியவற்றில் இந்த நிகழ்வு வெகுசிறப்பாக நடைபெறும். இந்த விழாக்களில் கலந்துகொண்டு பெருமாளை அருகிலிருந்து சேவித்தால் மறுஜென்மம் கிடையாது என்பது ஐதீகம்.


முரன் எனும் அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் மிகவும் துன்புறுத்தி வந்த நிலையில், தங்களைக் காப்பாற்றும்படி பகவான் விஷ்ணுவிடம் அவர்கள் அனைவரும் முறையிட்டனர். எனவே அனைவரையும் காக்கும் விதமாக பகவான் விஷ்ணு அரக்கன் முரனுடன் போரிட்டு படைக்கலன்களை அழித்தார்.


போர்:


அதன்பின் போர்க்களத்திலிருந்து விலகி, அடுகிலிருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார். குகையில் விஷ்ணு பகவான் ஓய்வெடுக்கச்சென்ற நிலையில், படைக்கலன்கள் அழிந்த ஆத்திரத்திலிருந்த அரக்கன் முரன் பெருமாளைக் கொல்ல வாளேந்தி சென்றார். அப்போது விஷ்ணுவின் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தி, பெண் உருவெடுத்து முரனுடன் போரிட்டு வென்றார்.


திருமாலின் சக்தியால் உருவான அந்தப் பெண்ணுக்கு ஏகாதசி என பள்ளி கொண்ட பெருமான் பெயரிட்டார். இவ்வாறு ஏகாதசி என்ற பெயர் வந்தது.வைகுண்ட ஏகாதசி நாளில் தன்னை வழிபடுவோருக்கு வைகுண்டத்தில் பதவி வழங்குவதாக பெருமாள் வரமளித்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.


108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், தமிழ்நாட்டின் முதன்மையான ஸ்தலமுமான ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.இந்த விழா பகல் பத்து, இராப்பத்து என இரண்டு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது.