செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவிலில் இன்று மாலை 5 மணியளவில் கந்த சஷ்டி பெருவிழா சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ளது. இதனால் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு உள்ளது முருகப்பெருமானுக்கு தீபஆராதனை நடைபெற்றது.
கந்த சஷ்டி திருவிழா
கந்த சஷ்டி திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் தொடர்ந்து 6 நாட்களாக பக்தர்கள் விரதம் இருந்து இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலை 12:30 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்க கொடி மரத்தை சுற்றி வருகின்றனர். ஒவ்வொரு சுற்றுக்கும் பக்தர்கள் பட்டாணி, சுண்டல், வேர்க்கடலை போன்றவற்றை எண்ணிக்கை வைத்து 108 முறை தங்கக்கொடி மரத்தை சுற்றி வருகின்றனர்.
பக்தி பரவசத்தில் பக்தர்கள்
இதில் குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணமாகாத கன்னிப்பெண்கள், பள்ளி மாணவர்கள், மற்றும் கை குழந்தையுடன் பெண்கள் ஆண்கள் என ஏராளமான பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்று பத்தி பரவசத்துடன் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தங்கக் கடி மரத்தை அதிகாலை முதலே சுற்றி வருகின்றனர். அதே போல் கோயில் வெளி பிரகாரத்தை சுற்றி வரும் நிலையில் கோயில் பிரகாரத்தில் அமர்ந்தும் 108 கந்தசஷ்டி கவசம் பாடியவர் முருகப்பெருமானை வேண்டி வருகின்றனர்.
சூரசம்ஹாரம் விழா
கந்த சஷ்டி திருவிழா முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை 5 மணிக்கு மேல் துவங்க உள்ள நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்,
மேலும் காவல்துறை சார்பில், ஓ.எம்.ஆர் சாலை, புதிய புறவழி சாலை கோவிலுக்கு வரும் நான்கு மாடவீதிகளிலும் காவல்துறையினர் பெரிகார்டு அமைத்து கார், பைக் போன்ற வாகனங்களை உள்ளே அனுமதிக்காமல் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
கந்தசாமி கோயில் வரலாறு (Thiruporur Kandaswamy Temple )
சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் மிக முக்கிய முருகர் கோவில்களில் திருப்போரூர் கந்தசாமி கோயிலும் ஒன்று. கந்தபுராணக் கூற்றுப்படி, முருகப்பெருமான் மூன்று இடங்களில் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டார். அவை முறையே திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருப்போரூர் ஆகும். திருச்செந்தூரில் கடல் மார்கமாகவும், திருப்பரங்குன்றத்தில் நில மார்கமாகவும், திருப்போரூரில் ஆகாய வழியிலும் போரிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திருத்தலத்திலேயே முருகப்பெருமான் தாரகாசுரனை வென்றதாக நம்பப்படுகிறது. திருக்கோவில் வரலாற்றுப்படி, முருகப்பெருமான் மதுரை மாநகரிலிருந்த, சிதம்பரம் அடிகளாரின் கனவில் தோன்றியதாகவும், தான் திருப்போரிலுள்ள பனை மரத்தினடியில், கேட்பாரற்று இருப்பதாக கூறி மறைந்ததாகவும், கடவுள் உரைத்தபடியே சிதம்பரம் அடிகளார் திருப்போரூர் வந்தடைந்தார். முருகப்பெருமானின் சிலையை மீட்டெடுத்து, திருக்கோவில் அமைத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
தந்தை சிவபெருமானை போலவே, திருப்போரூர் முருகன் சுயம்பு மூர்த்தமாக, தோன்றியவர் என்கிறது தல புராணம். சுயம்பு மூர்த்தியாக தோன்றி இருப்பதால் இக்கோவிலில் அபிஷேகம் நடைபெறுவதில்லை. மூலவருக்கு பதிலாக, ஸ்ரீசுப்ரமண்யர் யந்த்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.