திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு தோறும் நடைபெறும், இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். குறிப்பாக விழாவின் 6-ம் நாள் கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹார விழாவில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் கந்த சஷ்டி விழா நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் வழக்கம் போல் முழுமையான பக்தர்கள் பங்கேற்புடன் கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா இன்று துவங்கியது.
முதல் நாளான இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம் ஆகியவை நடைபெற்றது.காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் அருள்மிகு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். தொடர்ந்து காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது.காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து அருள்மிகு ஜெயந்திநாதர் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேர்தலும், தொடர்ந்து தீபாராதனையும் நடைபெறுகிறது.
இன்று சூரியகிரகணம் மாலை 5 மணி முதல் 6.15 மணி வரை நடைபெறுவதால் அன்று மாலை 4 மணிக்கு சுவாமிகளுக்கு பட்டு சாத்தி நடை சாத்தப்படும். பின்பு மாலை 6.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு மற்ற காலங்கள் மற்றும் யாகசாலை பூஜை நடைபெறும். இரவு 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அருள்மிகு ஜெயந்திநாதருக்கு அபிஷேக, அலங்காரமாகி கிரி வீதி உலா வந்து திருக்கோயில் சேர்தல் நடைபெறும்.
இரண்டாம் திருவிழாவான நாளை முதல் 5-ம் திருவிழாவான அக்டோபர் 29-ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிசேகம் நடைபெறும். காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி, பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து அருள்மிகு ஜெயந்திநாதர் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேர்தலும், தொடர்ந்து தீபாராதனையும் நடைபெறும். மாலை 4 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அருள்மிகு ஜெயந்திநாதருக்கு அபிஷேக, அலங்காரமாகி கிரி வீதி உலா வந்து திருக்கோயில் சேர்தல் நடைபெறும்.
6–ம் திருவிழாவான அக்டோபர் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறும்.காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி, பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து அருள்மிகு ஜெயந்திநாதர் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேர்தலும், தொடர்ந்து தீபாராதனையும் நடைபெறும்.
பிற்பகல் 2 மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அருள்மிகு ஜெயந்திநாதருக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறும். தொடர்ந்து மாலை 4 மணியளவில் ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கடற்கரையில் எழுந்தருள்வார். பின்பு அங்கு சூரசம்ஹாரம் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.சூரசம்ஹாரம் முடிந்த பின்பு சந்தோச மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்று, கிரிப்பிரகாரம் வந்து திருக்கோயில் சேர்தல் நடைபெறும். இரவு 108 மகாதேவர் சந்நிதி முன்பு சுவாமிக்கு சாயா அபிஷேகம் முடிவுற்ற பின் சஷ்டி பூஜைத் தகடுகள் கட்டுதல் நடைபெறும்.
7-ம் திருவிழாவான அக்டோபர் 31-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், அதிகாலை 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மற்ற கால பூஜைகளும் தொடர்ந்து நடைபெறும். அன்றைய தினம் அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடு நடைபெறும். மாலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்று விழாவும், இரவு 11 மணிக்கு மேல் திருக்கல்யாணம் வைபவமும் நடைபெறும்.
கந்த சஷ்டி விழா நாளை தொடங்கவுள்ள நிலையில் திருச்செந்தூரில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்த ஆண்டு உள்பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதமிருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் தங்கி விரதமிருக்க கூடுதலாக தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், சூரசம்ஹாரத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் கடற்கரையில் மணலை சமன் செய்து கம்பு தடுப்புகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனை தவிர தற்காலிக கழிப்பறை அமைத்தல், வாகன நிறுத்திமிடம் ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் (கூ.பொ) ம.அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், திருக்கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.