திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்திரை முதல் பங்குனி மாதம் வரையிலான 12 மாதங்களில் நடக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளும் ஒன்றாகும். திருவண்ணாமலை ஈசானியகுளம், அய்யங்குளம், தாமரைகுளம், கலசபாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில் அண்ணாமலையார் கலந்துகொள்வார். அதன்படி, இன்று திருவண்ணாமலை நகரில் உள்ள ஈசானியகுளத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைப்பற்றது.இதையொட்டி கோவிலில் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் மேள தாளங்கள் முழங்க கோவிலில் இருந்து ஈசானியகுளத்திற்கு புறப்பட்டு வந்தார். அதனைத்தொடர்ந்து ஈசானிய குளத்தில் தீர்த்தவாரியில் அண்ணாமலையார் சூல ரூபத்திற்கு சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழுங்க சந்தன அபிஷேகம், விபுதி அபிஷேகம், பால் அபிஷேகம், தயிர் அபிஷேகம் பல மூலிகைகளான அபிஷேகங்கள் நடைப்பெற்று சிறப்பு பூஜை செய்தனர்.




இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை வரை அங்கு பக்தர்களுக்கு அண்ணாமலையார் அருள்பாலித்துவிட்டு கோவிலுக்கு திரும்பினார். அண்ணாமலையார் கோவில் வரலாற்று கதையின்படி, திருவண்ணாமலை பகுதியை ஆட்சி செய்து வந்த வல்லாள மகாராஜா என்பவருக்கு அண்ணாமலையாரின் தீவிர பக்தர் ஆவார். அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் அண்ணாமலையார், வல்லாள மகாராஜா தனது மனைவியுடன் தினமும் மனமுருக குழந்தை வரம்கேட்டு வேண்டி வந்து உள்ளார். ஒரு நாள் வல்லாள மகாராஜாவின் கனவில் தோன்றிய அண்ணாமலையார், உனக்கு இந்த பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை. என்னையே மகனாக பாவித்து கொள். இந்த பிறவியில் நானே உனது மகன் என்று கூறி உள்ளார். அதன்படி, ராஜாவும் அண்ணாமலையாரை தனது மகனாக பாவித்து சிறந்த முறையில் ஆட்சி புரிந்து வந்து உள்ளார்.


அந்த சமயத்தில் தைப்பூசத்தின் போது ஈசானிய குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் அண்ணாமலையார் கலந்துகொண்டு விட்டு மாலையில் மேளதாளத்துடன் கோவிலுக்கு திரும்பி செல்லும் போது போர்களத்தில் வல்லாள மகாராஜா எதிரிகளால் தந்திரமாக கொல்லப்பட்டார் என்ற தகவல் அண்ணாமலையாருக்கு தெரிவிக்கப்படும். பின்னர் தன்னை மகனாக பாவித்த வல்லாள மகாராஜா இறந்ததை கேட்டு மேளதாளங்கள் இல்லாமல் கோவிலுக்கு அண்ணாமலையார் திரும்புவார் என்று கூறப்படுகிறது. அந்த வரலாற்று சம்பவத்தை நினைவு கூறும் வகையில் அறிவொளி பூங்கா அருகே தீர்த்தவாரி முடித்துவிட்டு அண்ணாமலையார் சென்ற போது பணியாளர் ஒருவர் வல்லாள மகாராஜா இறந்த செய்தியை தெரிவித்தார். இதையடுத்து மேளதாளங்கள் இன்றி அண்ணாமலையார் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.