தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 179வது ஆராதனை விழா வெகு விமரிசையாக நடைபெற்றத்து. இதில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பங்கேற்று இசையஞ்சலி செலுத்தினர். 

Continues below advertisement

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரை போற்றி நடத்தப்படும் ஆராதனை திருவிழாவானது இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் மிகப்பெரும் முக்கிய நிகழ்வாகும். தமிழ்நாட்டு தியாகராஜர் ஜீவ சமாதி அடைந்த இடமாக கருதப்படும் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இந்த நிகழ்ச்சியானது நடத்தப்படுகிறது. அவர் மார்கழி மாத பஞ்சமி நாளில் மறைந்ததாக நம்பப்படுகிறது. இந்நாளில் திருவையாறில் இசைக்கலைஞர்கள் பலரும் கலந்துக் கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடுவார்கள்.

அந்த வகையில் 179 வது தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா கடந்த ஜனவரி 3ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான தியாகராஜ ஆராதனை ஜனவரி 7ம் தேதியான இன்று அதிகாலை நடைபெற்றது. இதற்காக தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த திருமஞ்சன வீதியில் உள்ள வீட்டில் இருந்து உஞ்சவிருத்தி பஜனை புறப்பட்டது. 

Continues below advertisement

மேள தாளங்கள் முழங்க நடந்த இந்த நிகழ்ச்சி வீதியுலா வந்து சன்னதிக்கு வந்தது. இதன் பின்னர் நாதஸ்வர நிகழ்ச்சி, பிரபஞ்சம் பாலச்சந்திரனின் புல்லாங்குழல் இசை போன்றவையுடன் பஞ்சரத்ன கீர்த்தனையும் தொடங்கியது. இந்த தியாகராஜ ஆராதனை விழாவில் பிரபல இசை கலைஞர்களாக அறியப்படும் சுதா ரகுநாதன், கடலூர் ஜனனி, சீர்காழி சிவசிதம்பரம், மஹதி போன்றோர் கலந்து கொண்டனர்.

அதுமட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான கர்நாடக இசை கலைஞர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். அவர்கள் நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம் ஆகிய பஞ்ச ரகங்களில் ஒருமித்த குரலில் பாடியது சிறப்பாக அமைந்தது. அதற்கேற்ப இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீ சத்குரு தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து சத்குரு தியாகராஜ சுவாமிகளுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் போன்ற பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இந்த ஆராதனை விழாவானது இன்று இரவு 11:20 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.