மயிலாடுதுறை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரமும் நீதிமன்றத் தீர்ப்பும்
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. தனிநீதிபதியின் உத்தரவு செல்லுபடியாகும் என்று இருநீதிபதிகள் கொண்ட அமர்வில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், அறுபடை வீடுகளில் முதற்படை வீடாகத் திகழ்கிறது. இந்த மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக சில சிக்கல்கள் நீடித்து வந்தன. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தனர். இந்தத் தீர்ப்பு, தமிழகம் முழுவதும் உள்ள இந்து முன்னணியினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மயிலாடுதுறையில் பாஜகவினர் கோலாகலக் கொண்டாட்டம்
நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியினர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கூரைநாட்டில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணியசாமி ஆலயத்தில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோயில் ராஜகோபுரத்தின் முன் திரண்ட தொண்டர்கள், நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று முழக்கமிட்டனர். பின்னர், சுப்பிரமணியசாமி ஆலய ராஜகோபுரத்தில் தீபம் ஏற்றி தங்களது பக்தியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, அப்பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்
மயிலாடுதுறை 26-வது வார்டு கிளைத் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த எழுச்சிமிகு நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் மயிலாடுதுறை நகரத் தலைவர் ராஜகோபால், முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் மோடி கண்ணன், நகர துணைத் தலைவர் செல்வம், பொதுச்செயலாளர் மணிமேகலை, ராம்குமார், நகரச் செயலாளர் லட்சுமி. பிற அணி நிர்வாகிகள், சிறுபான்மை அணி மாவட்டத் தலைவர் அருள்ராஜ் மற்றும் நகர், கிளைப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொண்டர்களின் உணர்ச்சிப் பெருக்கு
நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கிடைத்திருப்பது தர்மத்திற்கு கிடைத்த வெற்றி. பல ஆண்டுகால கோரிக்கை இன்று நீதிமன்றத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. முருகப்பெருமானின் அருளால் இனி ஆண்டுதோறும் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே மயிலாடுதுறை சுப்பிரமணியசாமி கோவிலில் நடைபெற்ற இந்த தீபம் ஏற்றும் நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பிற்காக அப்பகுதியில் காவல்துறை கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.