வைணவ ஸ்தலங்களில் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் விசேஷமான நாளாகும். இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு அனைத்து வைணவ ஸ்தலங்களாக விளங்கும் பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. இந்த நிலையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கிய ஸ்தலமாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்பது ஸ்தலங்களாக விளங்குகின்ற ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில், நத்தம் விஜயாசான பெருமாள் திருப்புளியங்குடி காய்ச்சினிவேந்த பெருமாள், இரட்டை திருப்பதி அரவிந்தலோசனார், பெருங்குளம் மாயக்கூத்தர், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் என ஒன்பது நவதிருப்பதி ஸ்தலங்களிலும் அதிகாலை முதலில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் இன்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நத்தம் விஜயாசனப் பெருமாள் கோவிலில் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு தாயார்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதற்கிடையில் தமிழக அரசு சார்பில் பக்தர்கள் நவதிருப்பதி ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடு செய்வதற்கு சிறப்பு வாகனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடக்க நிகழ்ச்சி ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் முன்பு நடந்தது. இந்த நிகழ்ச்சியை ஆழ்வார் திருநகரி ஜீயர் எம்பெருமானார் சுவாமிகள் தொடங்கி வைத்தார். பக்தர்கள் அனைவரும் 9 நவதிருப்பதி கோயில்களுக்கும் பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களுக்கு வேண்டிய பிரசாதங்கள் அங்கு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.