தஞ்சாவூர்: நவராத்திரி விழா உருவான கதை தெரியுங்களா? தெரிந்து கொள்ளுவோமா. நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டியது இது.


10 ஆயிரம் வருடங்களுக்கு மேல் தவம்


காசிப முனிவருக்கும் அவரது மனைவி திதி தேவிக்கும் பிறந்தவர்கள் தான் அரக்கர்கள். இந்த அரக்கர்கள் பல வருடங்களாக தவமிருந்து பிரம்மன் மற்றும் சிவனிடம் பல்வேறு வரங்களை பெற்று மக்களுக்கும், தேவர்களுக்கும் பல்வேறு துன்பங்களை அளித்து வந்தனர். அசுரனான சும்பன் மற்றும் நிசும்பன் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் வருடங்களுக்கு மேல் தவம் இருந்து பிரம்மனிடம், ‘தங்களை யாரும் அழிக்க கூடாது’ என்ற வரத்தை கேட்க, அதற்கு பிரம்மன் அது எப்படி அழியாமல் இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். இதன் பின்னர் அந்த அரக்கர்கள் அப்படி நாங்கள் இறக்கும் தருணம் ஒன்று ஏற்பட்டால், நிச்சயம் நாங்கள் ஒரு கன்னிப் பெண்ணின் கையினால் தான் இறக்க வேண்டும் என்ற வரத்தை பிரம்மனிடம் இருந்து கேட்டு பெற்றனர்.


மூவுலகையும், தேவர்களையும் ஆட்டி படைத்த சும்பன், நிசும்பன்


அதற்கு பின்னர் இந்த அசுரர்களின் ஆட்டம் அதிகரித்தது. இதையடுத்து சும்பனும், நிசும்பனும் மூவுலகையும், தேவர்களையும் ஆட்டி படைத்தனர். இதுகுறித்து தேவர்கள் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மாவிடம் சென்று கண்ணீர் மல்க முறையிட்டனர். மும்மூர்த்திகள் தங்கள் சக்தியை பயன்படுத்தி மகேஸ்வரி, கௌமாரி, வராஹி, மஹாலக்ஷ்மி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்மி, சாமுண்டி என பல அவதாரங்களை ஒரே அவதாரமாக அதுவும் துர்க்கை அவதாரமாக தோற்றுவித்தார்.




துர்காதேவி இளம் பெண் உருவம் கொண்டு பூலோகம் சென்றார்


பின்னர் துர்கா தேவி அழகிய இளம் பெண் உருவம் கொண்டு பூலோகத்திற்கு சென்றார். அசுரனான சும்பன் மற்றும் நிசும்பனின் சீடர்களாக இருந்த சண்டனும், முண்டனும் இந்த அழகான இளம்பெண்ணை அவர்களின் அசுர ராஜாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு துர்க்கை தேவியை வற்புறுத்தியுள்ளனர். அதற்கு துர்கா தேவி, “என்னை போரில் வீழ்த்தி யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களையே திருமணம் செய்து கொள்கிறேன்” என்று சபதம் எடுத்துள்ளார். இதை சண்டனும், முண்டனும் தங்கள் படைத்தளபதிகளிடம் கூற நிசும்பன் நிச்சயம் போரில் வெற்றி பெற்று இளம்பெண்ணை தன்னுடைய மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்தான்.


ஒவ்வொரு அசுரர்களையும் போருக்கு அனுப்ப தொடங்கினான். கிட்டத்தட்ட 60 ஆயிரம் அரக்கர்களை அனுப்பி தேவியை கடத்த சொல்லிய நிலையில், கடுங்கோபம் கொண்ட பார்வதி தேவி அந்த அரக்கர்களை எல்லாம் அழித்து கொன்று குவித்தார். கடைசியாக சண்டாவும், முண்டாவும் களத்தில் இறக்கினார் சும்பன். ஆனால் பார்வதி தேவி சண்டா மற்றும் முண்டாவின் தலையை வெட்டி வீசினார். இவற்றையெல்லாம் கண்டு சும்பனும், நிசும்பனும் ரத்த பீஜன் என்ற அரக்கனை தேவிக்கு எதிராக அனுப்பினார்கள். இந்த ரத்த பீஜன் கடுமையான தவம் இருந்து அவன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்து இன்னொரு ரத்த பீஜன் தோன்றுவான் என்ற வரத்தை பெற்றிருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


அழிக்க அழிக்க மீண்டும் மீண்டும் தோன்றிய ரத்த பீஜன்


துர்க்கை தேவி அவனை அழிக்க அழிக்க மீண்டும் மீண்டும் தோன்றினான் ரத்த பீஜன். பின்னர் துர்க்கை அம்மன் தன்னுள் உள்ள சாமுண்டி என்ற காளியின் வாயை விரிவாக திறந்து ரத்த பீஜனின் உடலிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் குடிக்கச் சொல்லி உத்தரவிட்டார். துர்க்கையின் கட்டளைபடி காளியும், ரத்த பீஜனின் அனைத்து ரத்தத்தையும் உறிய உயிரிழந்தான் ரத்த பீஜன். இப்படி அரக்கர்கள் அனைவரும் இறந்து போக இறுதியாக சும்பன் மற்றும் நிசும்பனே துர்க்கை தேவியுடன் போரிட முன்வந்தனர். அப்போது அவர்கள் இருவரும் பெற்ற வரங்கள் எல்லாம் எதுவுமற்றதாகி தேவியால் வதம் செய்யப்பட்டார்கள்.


9 நாள் போர்... 9 நாட்கள் நவராத்திரி


இப்படி, துர்கா தேவி 9 நாட்களும், 9 அவதாரத்தை எடுத்து 9 நாட்கள் போரிட்டார். இந்த 9 நாட்கள் தான் நவராத்திரி என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த 9 அவதாரங்களையும் அவர்களின் சக்திகளையும், வாகனங்களையும் எடுத்து கூறும் விதமாக தான் 9 நாள் கொலு வைக்கப்படுகிறது.