கள்ளக்குறிச்சி:  திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் தினமான இன்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் தினமான இன்றுஅதிகாலை 5:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜைகள், 7:00 மணிக்கு  திருப்பாவை சாற்றுமரை, 7:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி கண்ணாடி அறையில் எழுந்தருளினார். 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம்  நடந்தது. மதியம் 1:00 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. ஏராளமான  பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


உலகளந்த பெருமாள் கோவிலில் தல வரலாறு


உலகளந்த பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் மாநகரில் உள்ள ஒரு பெருமாள் கோயிலாகும். இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன. பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரோடும் திருமங்கை மன்னனும் இந்தத் தலத்தை மங்களா சாசனம் செய்திருக்கிறார். கோயில் அமைந்துள்ள திருக்கோயிலூர் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.


இத்தல தாயாரின் திருநாமம் ‘பூங்கோவல் நாச்சியார்’. முன் காலத்தில் மிருகண்டு முனிவர் என்பவர், வாமன மற்றும் திரிவிக்ரம அவதாரக் கோலங்களைக் காண வேண்டும் என்பதற்காக கடுமையாக தவத்தை மேற்கொண்டார். அவரது தவத்தைக் கண்டு பிரம்மன் வியப்படைந்தார். உடனே மிருகண்டு முனிவரின் முன்பாகத் தோன்றி, “முனிவரே.. தாங்கள் கிருஷ்ண பத்திரா நதிக்கரையில், கிருஷ்ணன் என்ற திருநாமத்தோடு இறைவன் வீற்றிருக்கும் தலத்திற்குச் சென்று தவம் செய்யுங்கள்” என்று பணித்தார்.


அதன்படியே அந்த தலத்திற்குச் சென்று தவம் இருந்த மிருகண்டு முனிவருக்கு, வாமன மற்றும் திரிவிக்ரம தரிசனம் கிடைத்தது. இத்தலம் முன் காலத்தில் ‘கிருஷ்ணன் கோவில்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது. மிருகண்டு முனிவருக்கு, திரிவிக்ரமராக தரிசனம் தரும் முன்பு இருந்த கிருஷ்ணன் சன்னிதி, தற்போதும் இந்த ஆலயத்தின் முன்புறத்தில் அமைந்துள்ளது. சாளக்கிராமத்தால் ஆன திருமேனியைக் கொண்ட ஆதிகிருஷ்ணர், இங்கு ஆனந்த கோலத்தில் அருள்புரிகிறார். இதை அறிந்த துர்க்கையும், விந்திய மலையில் இருந்து புறப்பட்டு இங்கு வந்து கோவில் கொண்டதாக தல வரலாறு சொல்கிறது.


இங்கு எழுந்தருளியுள்ள திரிவிக்ரமன், தனது இடது கரத்தில் சக்கரமும், வலது கரத்தில் சங்கும் ஏந்தி அருள்பாலிக்கிறார். அவரது திருமார்பில் ஸ்ரீவத்ஸமும், கண்டத்தில் கவுஸ்துபமும், காதுகளில் குண்டலமும் காணப்படுகிறது. இந்த ஆலயம் முக்தி தலமாகவும் திகழ்கின்றது.


அனுகிரகம் நிறைந்த புரட்டாசி 


புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதம். புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமை மிகவும் விசேஷமான தினம். புரட்டாசி சனிக்கிழமையில்தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான பெருமாளை வழிபடுவது வழக்கமாகும். இந்நிலையில், புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் உள்பட 108 திவ்யதேசங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.