இருள் சூழ்ந்த மேகங்களுக்கிடையே நடைபெற்ற காவேரி அம்மன் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்கு உட்பட்ட அபிஷேக மங்கலம் காவேரி அம்மன் ஆலயம் இந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இந்த ஆலயத்தில் ஏழு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுவது இந்த கோவிலின் தனி சிறப்பு. இந்த ஆலயத்தில் ஸ்ரீ வல்லப கணபதி, ஸ்ரீ காவேரி அம்மன், ஸ்ரீ துர்க்கை அம்மன், ஸ்ரீ அகோர வீரபத்திர சுவாமி, ஸ்ரீ முன்னுடையான் முனியப்ப சாமி, ஸ்ரீ காமன் சாமி ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளன. இந்த ஆலயத்தின் திருப்பணிகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்தது. தற்போது திருப்பணி நிறைவு பெற்று இந்த ஆலயத்தின் குடமுழுக்கு விழாவனது கடந்த ஒன்றாம் தேதி விக்னேஸ்வர பூஜை  மகா சங்கல்பம் ஆச்சர்ய வர்ணம் ப்ரவேச பலி ஆகியவை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம்,  நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம் சாந்தி ஹோமம், விசாக ஹோமம், மூர்த்தி ஹோமம், பிரசன்னா அபிஷேகம் தீர்த்தம் எடுத்து வருதல், கும்பாலங்காரம், யாகசாலை பிரவேசம், யாக பூஜைகள், ஜெபம் ஹோமம் பூர்ணாகதி நடைபெற்று அதனைத் தொடர்ந்து ஒன்றாம் கால யாக பூஜை கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. 




அதனைத் தொடர்ந்து ஆறாம் தேதி இரண்டாம் கால யாக பூஜையும் அன்று மாலை மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்று நான்காம் கால யாக பூஜை இன்று காலை நடைபெற்று மகா பூர்ணாகதி முடிவடைந்து புனித நீர் கட புறப்பாடு நடைபெற்றது. கடம் ஆலயத்தை சுற்றி வந்த பின்னர் காவேரி அம்மன் விமானத்திற்கு புனித நீர் கொண்டுவரப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த புனித நீர் சுற்றி இருந்த 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த கலச புனித நீரில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாரதனை நிறைவடைந்தது.




அதேபோன்று ஆலயத்தின் சார்பில் பெரும்பாலான பொதுமக்கள் வருகை தந்த காரணத்தினால் அவ்வப்போது ஒலிப்பெருக்கி மூலம் நகைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் படியும் கூட்டத்தில் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் படியும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன. குறிப்பாக இந்த குட முழுக்கை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 15 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதேபோன்று இந்த குடமுழுக்கு விழாவிற்கு அபிஷேகமங்கலம் மட்டுமல்லாது அருகில் உள்ள மருத வஞ்சேரி ஆண்டார் பந்தி கூத்தனூர் பூந்தோட்டம் குடவாசல் எரவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 2000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதால் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் சரபோஜி ராஜபுரம் ஊராட்சி சார்பில் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பக்தர்களுக்கு தனி கூடம் அமைத்து அங்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவில் அபிஷேகமங்கலம் மட்டுமல்லாது சுற்றியுள்ள மருவத்தூர் பூந்தோட்டம் கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அதனைத் தொடர்ந்து குடமுழுக்கு விழாவை காண வருகை தந்திருந்த சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்காக தனி கூடம் என்பது அமைக்கப்பட்டு 5000 நபர்களுக்கு அன்னதானம் தயார் செய்யப்பட்டிருந்தது. பொதுவாக குடமுழுக்கு நடக்கும் ஆலயங்களில் அன்னதானம் என்பது வாகனங்களில் வைத்து வழங்கப்படும் ஆனால் இந்த காவேரி அம்மன் ஆலய குடமுழக்கில் தனி கூடம் என்பது அமைத்து அதில் அனைவரும் அமர்ந்து உணவருந்தும்படி அன்னதானம் அளிக்கப்பட்டது மிக சிறப்பான ஒன்றாக கருதப்பட்டது.