நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் பஞ்சமூர்த்தி மகா ரதங்கள் புனரமைப்பு நடைபெற்று வருகிறது. அதில் சுப்ரமணியர் மரதேரானது சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது. இதில் வருகின்ற 27-ம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 3-ம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ள நிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் குறித்த செய்தி கோவில் நிர்வாகமோ மாவட்ட நிர்வாகமோ அறிவிப்பதற்கு முன்பாக சமூக வலைதளத்தில் பரவியது. அதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் நேற்று முன்தினம் காலை வெள்ளோட்டம் குறித்த தகவலை செய்தியாளர்களுக்கு அறிவித்தது. நேற்று காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் வெள்ளோட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சுப்பிரமணியர் தேரில் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு தயாராக இருந்தது.காலை திடீரென சமூக வலைதளத்தின் வாயிலாக சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்தி பரவியது.
இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர். திடீரென சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில் நிர்வாக காரணத்திற்காக ஒத்தி வைக்கப்பட்டதாக ஆட்டோவில் ஒளி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. மேலும் ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் கோவில் நிர்வாகத்தால் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பால் கிராமங்களில் இருந்து தேரை வடம் பிடிக்க வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி நடைபெற்று வரக்கூடிய நிலையில் மாவட்ட நிர்வாகமோ அல்லது கோவில் நிர்வாகமோ அதிகாரப்பூர்வமான தகவல்களும் இன்னும் செய்தியாளர்களை சந்தித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் வெளிவந்து கொண்டிருக்க கூடிய அனைத்து செய்திகளும் ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் முன்வைக்கப்படக்கூடிய தகவல்கள் மட்டும் தான் வெளி வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேரை சோதனை செய்து தேர் வெள்ளோட்டம் நடைபெறலாம் என சான்றிதழ் அளிக்கப்படும். அந்த சான்றிதழ் கொடுக்கப்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பின்னர் தேரில் புதியதாக புனரமைக்கப்பட்ட உயரம் அதிக அளவில் உள்ளதாகவும் இதனால் பொதுப்பணித்துறை அதிகாரி சான்றிதழ் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.