மார்கழி மாதம் 15வது நாளான இன்று, இந்த நாளுக்கு உரிய திருப்பாவை பாடலாக ஆண்டாள் இயற்றியதை காண்போம்.
பதினான்காவது பாடல் மூலம், சற்று கோபத்தோடு தோழிகளை எழுப்புவது போல பாடல் அமைத்த ஆண்டாள், பதினைந்தாவது பாடல் மூலம், கிண்டலாக உரையாடல் வழியாக தோழியை எழுப்புவது போல பாடல் அமைத்திருக்கிறார்
பாடல் விளக்கம்:
எல்லே, இன்னம் உறங்குதியோ என்று பாண்டிய நாட்டு பாசையில் ஆண்டாள் தோழியை கேட்கிறார். இதற்கு முன்பு வரை, தன்னை ஆயர்குலத்து பெண்ணாக காட்சி படுத்தி வந்த ஆண்டாள், முதல் முறையாக தன்னை ஸ்ரீவில்லிபுத்தூர் பாசையில் பேசி சொந்த ஊரை அடையாளப்படுத்துகிறார்.
எவ்வளவு நேரம் உனக்காக காத்து கொண்டிருப்பது, சீக்கிரம் எழுந்து வா.! இதை கேட்ட உறங்கி கொண்டிருக்க கூடிய தோழி, கேட்கிறாளர், எல்லாரும் வந்து விட்டார்களா...எல்லாரும் வந்துவிட்டது போல, என்னை வந்து எழுப்புகிறாய் என்கிறார்,
அதற்கு வீட்டுக்கு வெளியே உள்ள தோழி, வாய் பேசுவதை நிறுத்து, எல்லாரும் வந்து விட்டார்கள், சாமர்த்தியசாலி போல பேசாதே என்கிறார்,
அதற்கு தூக்க கலக்கத்தில் உள்ள தோழி, தூக்கத்தை கலைக்கும் தோழியின் மீதுள்ள கோபத்தில், பேசுவதில் நீங்களே வல்லவர்களாக இருங்கள்; பிறகு, தவறை ஒப்பு கொண்டது போல பேசுகிறார்.
குற்றத்தை ஏற்று கொண்டதை அறிந்த, வீட்டிற்கு வெளியே உள்ள தோழிமார்கள் அமைதியாக பேச ஆரம்பித்துவிட்டனர்.
சரி, எல்லாரும் வந்துவிட்டார்களா என கேட்கிறாள்..
அதற்கு வாசலில் உள்ள தோழி, நீ வேண்டும் என்றால், வந்து எண்ணி பார்த்துக்கொள் என கூறுகிறார்.
யானையை கொன்று, அரக்கனை கொன்ற வீரனை, மாயனை பாடுவதற்குத்தானே உன்னை எழுப்புகிறோம், ஆகையால் எழுந்து வா என தோழிகள் கூறுகின்றனர்.
இப்பாடலில், ஆண்டாள் பேச்சு தமிழை சிறப்பாக கையாண்டுள்ளார். அதாவது இருவருக்கும் இடையே நிகழும் உரையாடலை பாட்டில் புகுத்தி , முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழை கையாண்டுள்ளார். மேலும், செய்த தவறை ஏற்று கொள்ளும் பண்பை, சற்று மேன்மை படுத்தி காண்பிக்கிறார் ஆண்டாள்.
திருப்பாவை பதினைந்தாவது பாடல்:
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின்! நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார்போந் தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோ ரெம்பாவாய்
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.
பக்தி இயக்கம்:
கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கியம் நயம் மிக்கதாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தி பாடல் அமைத்திருப்பதை காணும்போது, ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.