மார்கழி மாத்தில் கண்ணணை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவை இலக்கியத்தை ஆண்டாள் இயற்றியுள்ளார்.


பதிமூன்றாவது பாடல் மூலம் தோழியின் அழகை சொல்லி எழுப்புவது போல பாடல் அமைத்த ஆண்டாள், பதினான்காவது பாடல் மூலம், கோபத்தோடு எழுப்புவது போன்று பாடல் அமைத்திருக்கிறார்.   


 பாடல் விளக்கம்:


பெண்ணே, உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என தெரியுமா?; உன் வீட்டில் ஆம்பல் தூங்க சென்றுவிட்டது, தாமரை எழுந்துவிட்டது.


அதாவது, ஆம்பல் மலரானது இரவில் மலரும், சூரிய உதயமானவுடன் சுருங்க தொடங்கிவிடும். இந்த நுட்பத்தை அறிந்த ஆண்டாள், அதை நுட்பமாக பாடலில் புகுத்தியுள்ளார்.


மேலும், முனிவர்களே சிரித்த முகத்தோடு, சங்கு ஊதுவதற்காக கோயிலுக்கு சென்றுவிட்டார்கள்...


என்னை எழுப்புவதாக சொல்லிவிட்டு, நீ தூங்கி கொண்டிருக்கிறாயே…உனக்கு வெட்கமாக இல்லையா..!


எதுக்காக உன்னை எழுப்புகிறோம் என்றால், சங்கு மற்றும் சக்கரத்தை கையில் ஏந்தியிருக்க கூடிய கண்ணபிரானை வணங்க செல்ல வேண்டும். ஆகையால், எழுந்து வா பெண்ணே என்று தோழியை சற்று கோபத்தோடும், உரிமையோடும் எழுப்பும் வகையில், ஆண்டாள் பாடல் வழியாக காட்சிப்படுத்துகிறார்


இப்பாடல் மூலம், எண்ணம் வந்து விட்டால் மட்டும் போதாது...சொன்னால் மட்டும் போதாது... சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என்று ஆண்டாள் குறிப்பால் உணர்த்துகிறார்.


இதையும் படிக்க: Thiruppavai 13: தாமரைக் கண்கள் உடைய அழகான பெண்ணெ.!...எழுந்திரு:  எழுப்பும் ஆண்டாள்


திருப்பாவை பதினான்காவது பாடல்:


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்


    செங்கழுநீர் வாய் நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பினகாண்


செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்


    தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந் தார்


எங்களை முன்னம் எழுப்புவரின் வாய்பேசும்


    நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்


 சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்


   பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்



கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.


பக்தி இயக்கம்:


கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.


மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கியம் நயம் மிக்கதாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தி பாடல் அமைத்திருப்பதை காணும்போது, ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.