திருப்பாவை ஒன்பதாவது பாடலில், தன்னுடைய தோழி எப்படி தூங்குகிறார் என்பதை ஆண்டாள் காட்சி படுத்தினார். பத்தாவது பாடல் மூலம், தூங்கி கொண்டிருக்கும் தோழியை நகைச்சுவையாக எழுப்புவது போல் காட்சிபடுத்துகிறார் ஆண்டாள்.


பத்தாவது பாடல் விளக்கம்:


தோழியே.! காலையில் எழுந்து தவம் புரிந்து, சொர்க்கம் செல்வதாக சொன்னாயே; ஆனால் இன்னும் தூங்கி கொண்டிருக்கிறாயே.!, என தூங்கி கொண்டிருக்கும் தோழியை, வாசலில் இருக்கும் தோழிகள் கிண்டலாக பேசுவது போன்ற ஆண்டாள் காட்சிப்படுத்துகிறார்.


கதவைத்தான் திறக்கவில்லை, வாயையும் திறக்க மாட்டாயா …


கும்ப கர்ணன், உனக்கு தூக்கத்தை தந்துட்டு போய்விட்டாரோ, கும்ப கர்ணன் அதிக நேரம் தூங்குவதாக இராமாயணத்தில் அறியலாம். இப்பாடலில், கும்பகர்ணனை எடுத்து காட்டி தோழியை நகைச்சுவையாக எழுப்புவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.


நறுமணம் கமழும் நாராயணனை வணங்கி,அவரது அருளை பெற வேண்டாமா...


அழகான சிலை போல் இருக்கும் பெண்ணே, தூக்கத்தில் எழுந்து அப்படியே வந்து விடாதே, நீராட செல்வதற்கு ஏற்ப தயாராகி வா என கூறுகிறார்.


இப்பாடல் வழியாக , இலக்கியத்தில் நகைச்சுவையை புகுத்தக் கூடிய சிரமமான செயல்களை, சிறப்பாக கையாண்டுள்ளார், தமிழ் மகள் என அழைக்கப்பட கூடிய ஆண்டாள்.


Also Read; Thiruppavai 9: சாதனைகளை படைக்க, சில சுகங்களை துறக்கவேண்டும் - உணர்த்தும் ஆண்டாள்


திருப்பாவை 10வது பாடல்:


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!


மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?


நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்


போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்


கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்


தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?


ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே!


தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.


ஆண்டாள்:


கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.


பக்தி இயக்கம்:


கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.


மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கியம் நயம் மிகச் சிறப்பாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தியிருப்பதை காணும்போது ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.


Also Read: Thiruppavai Paadal 4: "8ம் நூற்றாண்டில் அறிவியலை கூறிய ஆண்டாள்" வெளிப்படும் தமிழரின் அறிவியல் புலமை