Margali Month Day 4 2024: மழை எப்படி பொழிய வேண்டும் என்பதை நான்காவது பாசுரம் மூலம் கண்ணபிரானிடம் எடுத்துரைக்கிறார், சூடி கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள்.
கி.பி- 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கருதப்படும் ஆண்டாள், அந்த காலத்திலே மழை எப்படி பொழிகிறது என்பதை அறிந்துள்ளார்.
அறிவியல் அறிந்த தமிழ்ச் சமூகம்:
மழை எப்படி பொழிகிறது, பூமியின் மீதுள்ள நீரானது சூரிய ஒளியால் உறிஞ்சப்பட்டு, மேகமாக மாறி, பின் மழையாக மீண்டும் நிலத்தை அடைகிறது என்பதை நாம் அறிவோம்.
இதை அன்றே ஆண்டாள், மழை பொழியும் நிகழ்வை, மழையை கண்ணனாக பாவித்து, கடலில் இருந்து நீர் எடுத்து வந்து நிலத்தில் மழையாக பொழிய வேண்டும் என கூறியுள்ளார். அப்பொழுதே, தமிழர்கள் அறிவியலில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கு, இது ஒரு சிறந்த சான்றாகும்.
மேலும், கண்ணனிடம் கேட்கிறாள், மழை வளத்தை நீ கொடுக்க வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும் என்றால், உன்னுடைய உருவத்தை போல் இருக்க வேண்டும் கேட்கிறார்.
அதாவது, உன்னுடைய கருமை நிறம் போல மேகங்களும், உன்னுடைய கையில் உள்ள சக்கர ஆயுதம் போல மின்னலுடனும், மற்றொரு கைகளில் உள்ள வலம்புரி சங்கு போல இடி ஓசையுடனும், வில்லிருந்து புறப்படும் அம்பு போல மழை பொழிய வேண்டும் என கண்ணனிடம் கேட்கிறார்.
எனவே, கண்ணனே மழையாக வருகிறார். அத்தகைய மழை நீரில் நீராடலாம் என பிற மகளிரை அழைக்க செல்கிறார்
இதிலிருந்து, தமிழை அழகாக உருவகப்படுத்தி பாடல் அமைக்கும் வல்லமை ஆண்டாளுக்கு இருப்பதை அறியலாம்.
மேலும், இப்பாடலில் இருந்து, அக்காலத்து மக்கள் அறிவியல் புலமையும், தமிழ் புலமையும் அறியலாம். மேலும், மழையை இறைவனாக கருதுவதன் மூலம், எந்த அளவு மழைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அழகான தமிழில் இலக்கியத்தில் எடுத்துரைத்துள்ளார்.
Also Read: Thiruppavai Paadal 3: "பிறருக்காக தாழ்வது தாழ்வில்லை..அது உயர்வு" உணர்த்தும் ஆண்டாள்..!
திருப்பாவை நான்காவது பாடல்:
ஆழி மழைக்கண்ணா! ஒன்றும்நீ கைகரவேல்;
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி,
ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்து,
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்,
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
பக்தி இயக்க காலம்:
கி.பி 6ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர்.
கி.பி. 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் கண்ணனை போற்றி 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை இயற்றியுள்ளார்.